மகர மாதத்தின் மகத்துவம்!

பூவுலகின் கோடானுகோடி ஜீவராசிகளுக்கும் உயிர் சக்தியை அளித்தருளும் சூரிய பகவான், குருவின் ஆட்சி வீடான, தனுர் ராசியை விட்டு, சனி பகவானின் ஆட்சி வீடான மகர ராசியைக் கடக்கும் காலத்தைத் தான் தை மாதம் எனவும், மகர மாதம் எனவும் கொண்டாடி மகிழ்கிறோம்.கும்ப ராசியில் இணைந்துள்ள சனி மற்றும் ராகுவிற்கு குரு பகவானின் சுபப் பார்வையும் கிடைக்கிறது!!“குரு பார்க்கின், கோடி தோஷம் விலகும்” -எனக் கூறுகிறது, “சூரிய சித்தாந்தம்”, “சாராவளி”, “உத்தரகாலம்ருதம்” போன்ற மிகப் புராதன ஜோதிட நூல்கள்.சனி, ராகு இரு கிரகங்களுமே, வீரியம் நிறைந்தவைகள்தான். அவை சனி பகவானின் ஆட்சி விடான கும்ப ராசியில் இணைந்திருப்பதனால், ஏற்படும் தோஷத்தைக் குறைத்துவிடும் மகத்தான சக்தி குருவின் பார்வைக்கு உள்ளது.

துலாம், தனுசு மற்றும் கும்ப ராசியினர் குரு பகவானின் சுபப் பார்வையின் நற்பலன்களை அனுபவிக்கவுள்ளனர்.குடும்ப வாழ்க்கையில், மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கும் மணவாழ்க்கை அமைவது, புத்திர பாக்கியம், நல்ல குணமுள்ள பெண் மனைவியாக அமைவது, லக்ஷ்மிகரம் பொங்கும் வீடு அமைதல், வற்றாத செல்வம், அன்புகாட்டும் முதலாளி, மனைவியின் பெருமைகளை உணர்ந்து போற்றும் கணவர் ஆகிய பேறுகள் ஒருவருக்கு கிடைக்க வேண்டுமானால், ஒருவரின் ஜனன கால ஜாதகத்கதில் குரு பகவான் சுப பலம் பெற்றும், அவரது தசையும் அமைந்திருப்பது அவசியமாகும்.செல்வத்தையும், சுகத்தையும் தருபவர் சுக்கிரன்! ஆனால், மன நிறைவையும், மகிழ்ச்சியையும், ஆத்ம பலத்தையும் அளித்தருள்பவர் குரு பகவானே ஆவார்!!

உதாரணமாக, பெண்களின் ஜனன கால ஜாதகத்தில், சுக்கிரன் சுப பலம் பெற்றிருப்பின், வாகன வசதி, அழகான, வசதியான வீடு, ஆடை – ஆபரணங்கள், ஆகியவற்றை அளிக்கும் வரன் அமையும்.
பெண்களின் ஜனன ஜாதகத்தில், குரு பகவான் சுப பலம் பெற்றிருப்பின், அன்பான, ஒழுக்கமான, நற்குணங்களுடன்கூடிய கணவர் அமையப்பெறுவர். “இவன் தந்தை என்னோற்றான்கொல்…!” -என்று பிறர்வியக்கும்படியான நற்குணங்கள் அமைந்த சத்புத்திரர்கள் அமையப் பெறுவர்.இதே போன்று, இளைஞர்களின் ஜனன கால ஜாதகத்தில், களத்திர ஸ்தானம் சுப பலம் பெற்றிருந்தால், கற்பு, ஒழுக்கம், பொறுமை, பிற உயிர்களிடம் அன்பு, பெரியோர்களிடம் மரியாதை, தெய்வ பக்தி ஆகியவற்றினால், சிறந்த பெண் மனைவியாக அமைவார்.

வாழ்க்கையில், நல்ல கல்வி, மனநிறைவையளிக்கும் உத்தியோகம், அன்பு காட்டும் எஜமானர், பொறாமையற்ற நண்பர்கள், தேவையான அளவிற்கு வருமானம் ஆகியவை அமைவதற்கும் ஜனன கால ஜாதகத்தில், குரு பகவான் நன்கு அமைந்திருக்க வேண்டும்.பெண்மணிகளுக்கு, ஒழுக்கம், அன்பு ஆகியவற்றினால் திகழும் கணவர் அமைவதற்கும் ஜனன கால ஜாதகத்தில், குரு சுப பலம் பெற்றிருக்க வேண்டும்.சுருக்கமாகக் கூற வேண்டுமாகில், செல்வத்தில் திளைக்கும் கணவரை சுக்கிரனும், அன்பில் சிறந்த கணவரை குரு பகவானும் அளித்தருள்வதாக “பூர்வபராசர்யம்” என்ற மிகப் புராதன ஜோதிட நூல் விவரித்துள்ளது.இதே போன்று, நீண்ட ஆயுளையும், நோயற்ற நல் வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் அளித்தருள்பவர் ஜீவன – ஆயுள் காரகரான சனி பகவானேயாவார்.

ஜனன கால ஜாதகத்தில், எந்த அளவிற்கு சனி பகவான் சுப பலம் பெற்றிருக்கிறாரோ அந்தளவிற்கு ஜாதகரும் சுகப் படுவர்!ஆதலால்தான், ஜாதகத்தின் உயர்வு – தாழ்வுகளை நிர்ணயிப்பதில், சனி பகவானுக்கு பெரும் பங்கு உள்ளது என புராதன ஜோதிட நூல்கள் கூறுகின்றன.இவை போன்றே, சமயோஜித புத்தி கூர்மையையும், சாதுர்யத்தையும், ஆபத்துக் காலங்களில் மனோ தைரியத்தையும் கொடுப்பதில் தன்னிகரற்றவர் சனி பகவான்!!உத்தியோகத்தில், திறமையை அளிப்பதும், அத்திறமையை வெளிக் கொணர்ந்து, பிறர் அறியச் செய்பவரும் சனி பகவானே ஆவார்!வாழ்க்கையில், திறமை மட்டுமே போதாது! அதிர்ஷ்டமும் வேண்டுமல்லவா? ஆதலால்தான், ஜனன ஜாதகத்தில், சனி பகவானுடன் சுக்கிரன், குரு, செவ்வாய் ஆகிய மற்ற கிரகங்களும் சுப பலம் பெற்றிருத்தல் அவசியமாகிறது!இவ்விதமாக, நாம் பல வகைகளிலும் வாழ்க்கையில் உயர்வதற்கு சனி பகவானின் சஞ்சார நிலை எந்த அளவிற்கு அவசியமானது என்பதை உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய சக்தியும், பெருமையும் ெபற்றுள்ள சனி பகவான், ராகுவுடன் சேர்ந்து தனது ஆட்சி வீடான கும்பத்தில் இம்மாதம் முழுவதும் வலம் வருவது, எந்த அளவிற்கு நமக்கு உதவுகிறது என்பதையும், இனி காண்போமா…?!

முதற்கண் தைமாதத்தில் நிகழவிருக்கும் புண்ணிய தினங்களைத் தெரிந்துகொள்வோம்.

தை 01 (15-01-2026) வியாழக்கிழமை – உத்தராயண புண்ணியகாலம். மகர சங்கராந்தி பண்டிகை.
தை 02 (16-01-2026) வெள்ளிகிழமை – மாட்டுப் பொங்கல்.
தை 03 (17-01-2026) சனிக்கிழமை – காணும் பொங்கல் – பெரியோர்களை வணங்கி, அவர்களது ஆசியைப் பெறும் மகத்தான புண்ணிய தினம். இன்றைய தினம் மாத சிவராத்திரி புண்ணிய நாளும் சேர்ந்துள்ளது. விரதத்தினுள் உயர்ந்த ஏகாதசி விரதத்திற்கு அடுத்தபடியான விரதமாக இவ்விரதத்தை அனைத்து புராணங்களும், இதிகாசங்களும் சிலாகித்துக் கூறியுள்ளன. இவ்விரதத்தைக் கடைபிடிக்க விரும்புபவர்கள், ஒவ்வொரு ஜாமமும், சிவ பெருமானுக்கு 11 திரவியங்களைக் கொண்டு அபிஷேக – ஆராதனை பக்தி சிரத்தையுடன் செய்திடல் வேண்டும். மகதத்தான புண்ணிய பலன்களைத் தரவல்லது, இவ்விரதம்.
மேலும், இன்றய தினத்தில், ஸ்ரீமத்வ மகா புருஷர் வித்யாதீசர் புண்ணிய தீர்த்த தினம்.
தை 04 (18-01-2026) ஞாயிற்றுக்கிழமை – தை அமாவாசை: நம்முடன் வாழ்ந்து – மறைந்த நம் முன்னோர்களுக்கு, அவர்களின் ஆசிகளைப் பெருவதன்பொருட்டு, சமுத்திரம், ஆறு, குளங்களில், அல்லது வீடுகளில் அம்முன்னோர்களை நினைத்து, வணங்கி, சிரத்தையுடன் திதி கொடுத்து, நன்றிக் கடன் செலுத்துவது. மாதா மாதம் அமாவாசை தினம் வந்தாலும், அவைகளில் ஓராண்டில் மூன்று முக்கியமான அமாவாசை தினங்கள் வருவதாக சாஸ்திரங்கள் கூறியுள்ளன. அவை, தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகளாகும். மற்ற மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் திதி கொடுக்க முடியாமல் – அல்லது வேறு அலுவல் காரணமாக இயலாமற் போனாலும், வருடத்திற்கு வரும் மூன்று அமாவாசைத் தினங்களில் மட்டுமாவது திதி – தர்ப்பணங்களைச் செய்யும்பட்சத்தில், ஏனைய மற்ற அமாவாசையில் திதி செய்யாவிடினும் அதனால் உண்டாகும் பாபம் நம்மைச் சோராது.
மேலும், இன்றய தினத்தில், ஸ்ரீமத்வ மகா புருஷர் புரந்தரதாஸ புண்ணிய தீர்த்த தினம்.
தை 06 (20-01-2026) செவ்வாய்க்கிழமை- சந்திர தரிசனம். இந்நன்னாளில் சந்திரனின் தேய்பிறை முடிவுற்று, வளர்பிறை ஆரம்ப முதல் நாளாகையால், சந்திேரோதயத்தை மேற்குக் கீழ்வானில் தரிசனம் செய்யும் பக்த கோடிகளுக்கு அந்நாள் தொடங்கி அம்மாதம் முடியகிற மட்டுமல்லாது, ஆயிரம் பிறைகளைக் காணும் பாக்கியத்துடன், உடல்நலனுடன்கூடிய சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் கொண்டாடும் நன்னாளையும் பெற்று வையத்துள் வாழ்வாங்குவர் என்பது நவக்கிரக புராணம் உறுதிபடத் தெரிவிக்கின்றது. ஆகவே, தினகரன் வாசக அன்பர்கள் காசு – பணம் செலவில்லாத, மிகச் சுலபமான இந்தச் சந்திர தரிசனத்தைக் காண பிரார்த்திக்கின்றோம்.

தை 08 (22-01-2026)வியாழக்கிழமை – சதுர்த்தி விரதம்
தை 09 (23-01-2026) வெள்ளிக்கிழமை – வஸந்த பஞ்சமி – ஒரு தாமிர சொம்பில் கலசமாகச் செய்து, அதில் லட்சுமி தேவியை ஆவாகனம் செய்வித்து, நெய் தீபம் ஏற்றி, தாமரை மலர்களைக் கொண்டு பூஜை செய்தோமேயானால், கிரகப் பீடைகள் விலகி, லக்ஷ்மி கடாட்சம் பெருகும். மேலும், நீண்ட நாட்களாக சொத்து பிரச்னைக்காக கோர்ட்டுகளுக்கு அலைந்த நிலை மாறி உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நிலையான சொத்தாகிய, வீடு – நிலம் போன்றவை உங்களை வந்தடையப் போவது திண்ணம். மேலும், இன்றயை தினம் சொட்டநம்பி, நல்லூரான் திருநட்சத்திரம்.
தை 10 (24-01-2026) சனிக்கிழதமை – சஷ்டி விரதம்.
தை 11 (25-01-2026) ஞாயிற்றுக்கிழமை – ரத சப்தமி. இதிகாசமாகிய மகாபாரதத்தில் பாஞ்சாலி மாத விலக்காகியிருந்த சமயத்தில் அந்தப் பதிவிரதையின் கூந்தலைப் பற்றி இழுத்துவந்து சபையில் அவளின் ஆடைகளைக் களைய எத்தனித்த துச்சாதனனின் அடவாடித்தனத்தை – மாபாதகச் செயலை, பெருஞ்சபையில் கூடியிருந்த அனைத்து பெரியோர்களிடமும் முறையிட்டுக் கதறினாள், பீஷ்மரின் பாதத்தில் விழுந்து, வணங்கி தன்னைக் காக்குமாறு பணிந்தபோது, பராக்கிரமம் மிக்க பீஷ்மர் பிதாமகர் – சக்தி இருந்தும், தன்னுடைய ஐம்புலன்களும் தலை கவிழ்ந்து தன் கையாலாகத்தனத்தைப் பறைசாற்றியபோது அதனால் ஏற்பட்ட மகாபாபத்தினால், தான் நினைத்தபோது மாத்திரமே மரண தேவதை, தன்னை ஆலிங்கனம் செய்திடல் வேண்டும் என்ற செவ்வரத்தைப் பெற்றிருந்தும், போர்களத்தில், அர்ஜுனனின் காண்டீபத்தினால் வீழ்த்தப்பட்ட நிலையில் தன் உயிர் இன்னும் பறிபோகவில்லையே

அதற்கான காரணத்தையறிந்த பீஷ்மாச்சாரியார், தன்னுடலில் ஏழு இடங்களில் ஏழு எருக்கம் இலைகளை வைக்குமாறு கூற, அவ்விதமே எருக்கம் இலைகளை அவர் குறிப்பிட்ட அவயங்களில் வைக்க, அவர்தம் இன்னுடலைவிட்டு உயிர் பிரிந்தது. (இந்நிகழ்ச்சியின் உட்பொருள்: ஒருவன் ஒரு தகாத செயலைச் செய்தால், அவன் மீதுள்ள பயத்தின் காரணமாக நாம் வாய் திறவாமல், மௌனமாக இருந்திடல் கூடாது! அவ்வண்ணம் நாம் வாளாவிருந்தால், அவன் செய்திடும் தீச்செயல்களினால் உண்டாகும் பாபம் நம்மையும் பற்றிக் கொள்ளும் என்பதே இதன் தாத்பரியம். ஒன்று, சக்தி இருக்கும் பட்சத்தில், அச்செயலைத் தடுத்திட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஏன் இப்படிச் செய்கிறாய் என்றாவது கேட்க வேண்டும். ஏதும் பேசாமல் வாளாவிருந்திடல் கூடாது) இதன் காரணமாகவே, இன்றைய தினத்தில் நாமும் அறிந்தும், அறியாமலும் செய்திட்ட அனைத்து பாபங்களிலிருந்தும் நம்மை விடுவிக்கும் பொருட்டு தலை, இரண்டு தோள்கள், இரு தொடைகள் மற்றும் கால்களில் மொத்தம் ஏழு இடங்களிலும் (ஆண்கள் மஞ்சள் கலந்த அட்சதையுடனும், பெண்கள் மஞ்சள் பொடியுடன்கூடிய) ஏழு எருக்கம் இலைகளை வைத்துக் கொண்டு குளித்தால், சகல பாபங்களும் நீங்குவதோடு, நோய் – ெநாடிகளற்ற நல்வாழ்வைத் தந்தருளும்.ரதசப்தமி நன்னாளில், சூரிய பகவானுக்கு மானசீகமாக எருக்கம் இலைகளைக் கொண்டு அர்ச்சித்து, ஏழு வகையான உணவு வகைகளைக் கொண்டு நைவேத்தியம் செய்தால், இப்பிறவியிலும் ஏழேழ் பிறவியிலும் நீங்கள் செய்த பாபங்கள் அனைத்தும் விலகி, ஒருமித்த தம்பதி சமேதராய் போதும் போதும் என்ற அளவிற்கு செல்வ வளத்தைப் பெற்று, நன் மக்கட்பேறு பெற்று, “இந்த நற்குணங்களுடன் கூடிய குழந்தைகளைப் பெற இவர்களுடைய தாய் -தந்தையர் என்ன தவம் செய்தார்களோ?” -என்று அனைவரும் புகழ்ந்து கொண்டாடுவர்.மேலும், இன்றைய தினத்தில் கலிக்காம நாயனாரின் முக்தியடைந்த தினம்.

தை 12 (26-01-2026) திங்கட்கிழமை – பீஷ்மாஷ்டமி
தை 13 (27-01-2026) செவ்வாய்க்கிழமை – கிருத்திகை விரதம்
தை 15 (29-01-2026) வியாழக்கிழமை – சர்வ ஏகாதசி – ஜெய ஏகாதசி. கண்ணப்ப நாயனார் முக்தியடைந்த நாள்.
மேலும், இன்றயை தினத்தில், திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் திருநட்சத்திரம்.
தை 16 (30-01-2026) வெள்ளிக்கிழமை – பிரதோஷம். ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு பிரதோஷ தினங்கள் வருவதால், அவை இரண்டையும் பக்தி சிரத்தையுடன் உபவாசமிருந்து, பிரதோஷக் காலத்தில் ஸ்ரீசாம்பசிவ மூர்த்தியை ரிஷபாரூடராக தரிசிப்போர்க்கு, சகல நன்மைகளும் வந்தடையும். அரிவாட்ட நாயனார் முக்தியடைந்த நாள்.
தை 17 (31-01-2026) சனிக்கிழமை – எம்பார் திருநட்சத்திர தினம்.
தை 18 (01-02-2026) ஞாயிற்றுக்கிழமை – தைப்பூசம், பௌர்ணமி விரதம் – ஸ்ரீமந் நாராயணனே, “இவ்விரதத்தைக் கைக்கொள்வார்க்கு, சகல விதமான, அஷ்ட – ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் தந்தருள்வதாக சத்தியப் பிரமாணம் செய்திருப்பதனாலேயே இவ்விரதத்திற்கு சத்திய நாராயண விரதம் எனப் பெயர்க் காரணமாயிற்று. தை பூச நன்னாளில், பூச நட்சத்திரத்துடன் கூடிய பெளர்ணமி திதியில்தான், நல்லோர்களைக் காப்பதற்காகவும், தீயோரை அழிப்பதற்காகவும் பேரழகன் முருகப் பெருமானுக்கு, அன்னை பராசக்தி – பார்வதிதேவியானவள் சக்தி எனும் மகா ஆயுதத்தை, ஆசீர்வதித்துக் கொடுத்த தினம்.
மேலும், இன்று திரிபுர சுந்தரி ஜெயந்தி. தசாவதாரங்களை எடுத்த திருமாலின் 7-வது அவதாரமாகிய ஸ்ரீராமாவதாரத்திற்கு பராக்கிரமத்திற்கு நிகரானதாகவும், ஜனன ஜாதகத்தில் பித்ரு ஸ்தானமாக போற்றிக் கொண்டாடப்படும் சூரிய பகவானின் அனைத்துவிதப் பாபங்களையும் போக்க வல்லது இவ்விரதத்தை அனுஷ்டித்தால்!

இத்தினத்தை “ஆகாமாவை தினங்கள்” எனக் கூறுகின்றனர். இம்மாதத்தில் சூரிய உதய காலத்தில், பௌர்ணமி திதியில், நதிகளில் ஸ்நானம் செய்தால், முற்பிறயில் செய்த பாபங்களும் தீயினிற் தூசாகிப் போய்விடும். மகத்தான புண்ணிய பலன்கள் உண்டாகும். மேலும் இந்நன்னாளில், தயிரன்னம் முதற் கொண்டு, தங்களால் இயன்ற தான – தர்மங்களைச் செய்தால் அதிக – விசேஷப் பலன்களைத் தரவல்லது என அனேக இதிகாசப் புராணங்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன.தை 20 (03-02-2026) செவ்வாய்க்கிழமை- திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம் – ஒருமுறை பல்லவராஜன் தன்மீது பாடல் புனையுமாறு வற்புறுத்த, “ஸ்ரீமந் நாராயணனையன்றி எந்த நரனையும் பாடனே்” -எனக் கூறக் கேட்ட அவ்வரசன், நாட்டை விட்டு வெளியேறச் சொன்னான். அதைச் சிரமேற்கொண்ட ஆழ்வார், கச்சிப்பதி திருக்கோயிலுக்குச் சென்று,
“கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்!”
எனப் பெருமானிடம் வேண்ட, பெருமானும் ஆழ்வாருடன் புறப்பட்டுவிட்டதைக் கேள்வியுற்ற மன்னர், தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்க, ஆழ்வாரும்,
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருங்பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்”
என்றதுதான் தாமதம், திருமாலும் தன் பக்தனின் பக்திக்கு இணங்கி அவ்வண்ண்ணமே செய்தமையால், “சொன்ன வண்ணமே செய்த பெருமாள்” இன்றளவும் போற்றப்படுகிறது.
மேலும், இன்று திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்.
இன்றைய தினத்தில் சித்த மகா புருஷரும், அஷ்டமா சித்துக்கள் அனைத்தையும் கைவரப் பெற்றவரும். இரும்பை, ஸ்வர்ணமாக்கும் வித்தையும், கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை அறிந்தவரும், பிறக்கும்போதே அவருடைய அழுகைக் குரலும்கூட “சிவ… சிவ..” என்கிற மாமந்திரத்தை உச்சரிப்பதைக் கண்ட பெற்றோரும் மற்றோரும் அவரை “சிவ வாக்கியர்”என்றே அழைக்கப் பெற்றவரும், மகர மாதத்தில், மக நட்சத்திரத்தில் அவதரித்தவருமான சிவவாக்கியரின் அவதாரப் புண்ணிய தினம்.
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே.
உங்கள் வீட்டுப் பூஜையறையில், அரிசி மாக் கோலமிட்டு, மூன்று மண் அகல் விளக்குகளில் நெய் தீபமேற்றி வைத்து, சிவ வாக்கியரின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, மேற்கூறிய பாடலை 18 முறை பாடி, கற்கண்டு நைவேத்தியம் செய்து, கற்பூராரத்தி காட்டி வணங்கினால், சித்த மகா புருஷர், உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும், சகல கலைகளையும் கைவரப் பெற அருள் புரிவார். நமக்குத் தேவை பக்தியுடன் கூடிய நம்பிக்கை மட்டுமே!

தை 22 (05-02-2026) வியாழக்கிழமை – சங்கடஹர சதுர்த்தி.சண்டேஸவரர் நாயனார் முக்தியடைந்த தினம்.
தை 23 (06-02-2026) வெள்ளிக்கிழமை – ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஜெயந்தி.மேலும், இன்றைய தினம் கூரத்தாழ்வார் திருநட்சத்திரம்.

தை 26 (09-02-2026) திங்கட்்கிழமை – மகேஷ்வராஷ்டமி – இந்நன்னாளில் காலையில் ஸ்நானம் செய்த பிறகு, திருக்கோயிலுக்குச் சென்று சிவ பெருமானையும், பிரதோஷக் காலமாகிய மாலை வேளையில், பைரவரையும் நெய் தீபமேற்றி, வணங்கி – வழிபட்டாலும் சுய தொழில் புரிபவர்களுக்கும், தொழிலில் ஏற்பட்டுவந்த சுணக்கம், தொழிற்போட்டிகள் மற்றும் இதர தடங்கல்கள் அனைத்தும் விலகி, அனைத்து துறைகளிலும் வெற்றி, புதுப்புது யுக்திகளைப் புகுத்தி, தொழிலில் தன்னிகரற்று விளங்க வைக்கும். திருநீலகண்ட நாயனார் முக்தி பெற்ற திருநாள்.
மேலும், இன்றய நன்னாளில், குரு காவலப்பன் திருநட்சத்திரம்.