திருவாரூர், ஜன. 12: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. அதன்பின்னர் பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மகளிர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் மற்றும் நான் முதல்வன் திட்டம், தோழி விடுதி, மகளிர் சுய உதவி குழுவினருக்கான சுழல் நிதி மற்றும் கடன் உதவிகள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம், மகளிர் நில உடமை திட்டம், கலைஞர் கைவினை திட்டம், அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம், முதல்வர் மருந்தகம், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம், மக்களுடன் முதல்வர் முகாம்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் விவசாயிகளுக்கான பயிர் கடன் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கி கடன் மற்றும் ஓய்வூதியம், மீனவர்களுக்கான திட்டங்கள், வீட்டுமனை திட்டம், கலைஞர் கனவு இல்லம் போன்றவையும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உங்க கனவ சொல்லுங்க என்ற திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கி வைத்ததையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டமானது துவங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்திலும் இந்த திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை தன்னார்வலர்களுக்கு கலெக்டர் மோகனச்சந்திரன், எம்பி செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் வழங்கினர். இதனையடுத்து இதற்கான விண்ணப்ப படிவமானது தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக மாவட்டம் முழுவதும் வழங்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த பணியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையருமான ஆனந்த் மற்றும் கலெக்டர் மோகன்சந்திரன் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் கூறுகையில், தமிழக அரசு மூலம் பொது மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது உங்க கனவை சொல்லுங்க என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊரக பகுதிகளில் 688 தன்னார்வலர்கள் மூலம் 3 லட்சத்து 14 ஆயிரத்து 723 குடும்பங்களுக்கும், நகரப் பகுதிகளில் 123 தன்னார்வலர்கள் மூலம் 54 ஆயிரத்து 929 குடும்பங்களுக்கும் என மொத்தம் 3 லட்சத்து 69 ஆயிரத்து 652 குடும்பங்களுக்கு இந்த விண்ணப்ப படிவம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் குடும்பத்தினரின் முகவரி, கல்வி தகுதி, வேலை விபரம், அரசு திட்டங்களில் பயன் பெற்ற விபரம், அரசு திட்டங்கள் முறையாக கிடைக்கப் பெறுகிறதா? அரசு திட்டங்கள் குறித்து 3 முக்கிய திட்டங்கள், தங்களது குடும்பத்தின் மேம்பாட்டுக்கு வரும் 2030ம் ஆண்டிற்குள் அரசு செய்ய வேண்டிய முதன்மையான 3 தேவைகள் எவை போன்றவை குறித்து கேட்கப்பட்டுள்ளதால் அதனை பொதுமக்கள் தவறாமல் பூர்த்தி செய்து மீண்டும் தன்னார்வர்களிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
