களைகட்டிய பொங்கல் பாரம்பரியம் பெண் பிள்ளைகளுக்கு சீர்கொடுக்கும் பெற்றோர்

புதுக்கோட்டை. ஜன.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பெண்பிள்ளைகளுக்கு பொங்கல் சீர்வரை கொடுக்கும் வைபவம் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரம் காலத்திற்கு அழியாது என்பதற்கு சான்றாக நிலைத்து நிற்கிறது தை திருநாள். இயற்கைக்கும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் தை பொங்கலில் பல சிறப்புகள் அடங்கியுள்ளது. தை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ந்து 3 நாள்கள் கொண்டாடும் இந்த பண்டிகையில் முக்கியமானது பொங்கல் சீர்வரிசை.

திருமணத்திற்கு பின் வேறு வீட்டிற்கு செல்லும் தனது மகள் மற்றும் சகோதரிகளுடன் எப்போதுமே பந்தம் நீடிக்க வேண்டும் என்பதற்காக தொடங்கியது தான் பொங்கல் சீர்வரிசை. தாய் வழி உறவில் மேற்கொள்ளும் சம்பிரதாயங்களில் பொங்கல் சீர்வரிசை மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக ஊரே மெச்சும் அளவிற்கு தங்களது உடன் பிறப்புகளுக்கு சகோதர்கள் சீர் செய்வார்கள்.

தலைப்பொங்கல் என்பது தலை தீபாவளியைப் போன்றது. எப்படி தல தீபாவளிக்கு பெண் வீட்டார்கள் தங்களது மாப்பிள்ளை மற்றும் பெண்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் தேவைப்படக்கூடிய வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி கொடுக்கிறார்களோ? அதே போன்று தான் பொங்கல் பண்டிகைக்கும். தாய்வீட்டு வழி உறவு வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என்பதற்காக பொங்கல் சீர் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

இந்த சீர்வரிசையில் பொங்கல் வைப்பதற்காக பித்தளை பானைகள், கரண்டி, பச்சரிசி, வெல்லம், உலர் திராட்சை, நெய் உள்ளிட்ட அனைத்து வகையான காய் கறிகள், மாடு, ஆடு, புத்தாடைகளையும் சீர் கொடுப்பார்கள். வசதிக்கு ஏற்றவாறு தங்கத்தில் மோதிரம், செயின் அல்லது வீட்டு உபயோகப் பொருட்களையும் கொடுப்பது பழக்கம். பழங்காலத்தில் இருந்தே இந்த சீர் கொடுக்கும் நடைமுறையில் இருந்து வருகிறது. வாழ்வியல் சூழல் மாறினாலும், நவீன காலத்திலும் தமிழர்களின் உறவு மற்றும் பண்பாட்டை தலைநிமிரச் செய்கிறது பொங்கல் சீர்வரிசை என்றால் அது மிகையாகாது.இதுகுறித்து மகளுக்கு பொங்கல் சீர் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் கூறுகையில், தலைமுறை தலைமுறையாக கொடுக்கும் பொங்கல் சீரை தவிர்க்க முடியாது என்பதால் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்க வந்துள்ளோம். பெற்றமகளுக்கு புகுந்த இடத்தில் எந்த குறையும் இருக்கக்கூடாது என்பதற்காக பொங்கல் சீர் கொடுக்கப்படுகிறது. இதை வைத்துதான் தங்களது மகள், பொங்கல் வைக்க வேண்டும் என்பது மரபு என்றனர்.

Related Stories: