தாம்பரம், ஜன.9: குரோம்பேட்டையில் ரூ.31.62 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, குரோம்பேட்டை பகுதி மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையான குரோம்பேட்டை – ராதா நகர் ரயில்வே சுரங்கபாதை கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அதிமுக ஆட்சி அமைந்த உடன், திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட பணி என்பதால் கடந்த 10 ஆண்டு காலமாக சுரங்கப்பாதை பணிகள் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சுரங்கப்பாதை பணிகள் விரைந்து முடிக்கப்பட்டது.
இந்நிலையில், ரயில்வே சுரங்கப் பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.31.62 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே சுரங்க பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதன் மூலம் ராதாநகர், ஜமீன் பல்லாவரம், போஸ்டல் நகர், நெமிலிச்சேரி, நன்மங்கலம் மற்றும் மேடவாக்கம் பகுதி பொதுமக்கள் பயன்பெறுவார்கள். அதனைத்தொடர்ந்து பல்லாவரம், சந்தை தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மண்டல குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பகுதிச் செயலாளர் இ.எஸ்.பெர்னார்ட் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதிய போக்குவரத்து நடைமுறை
ஜிஎஸ்டி சாலையிலிருந்து ராதா நகர், ராஜாஜி தெரு, வஉசி தெரு, டாக்டர்ஸ் காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் புதிய இருவழி சுரங்கப்பாதையை பயன்படுத்த வேண்டும். அதேபோல், மேற்கண்ட பகுதிகளிலிருந்து ஜிஎஸ்டி சாலைக்கு வரும் வாகன ஓட்டிகள் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்த வேண்டும். இந்த புதிய சுரங்கப்பாதையில் கனரக வாகனங்கள் மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த புதிய போக்குவரத்து நடைமுறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
