குன்றத்தூர் அருகே அரசு பஸ்-பைக் நேருக்கு நேர் மோதியதில் மாணவன் சாவு

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே அரசு பேருந்து-பைக் நேருக்குநேர் மோதியதில் பிளஸ் 2 மாணவன் பரிதாபமாக பலியானார். குன்றத்தூர் அடுத்த இரண்டாம்கட்டளை சந்திரசேகரபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகன் சரவணன் (17). குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இவர், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் டியூஷனுக்கு சென்றுள்ளார். பின்னர், டியூஷன் முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, குன்றத்தூரில் இருந்து பல்லாவரம் செல்லும் பிரதான சாலையில் ஆண்டாள்குப்பம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பேருந்தும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த மாணவன் சரவணன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ் 2 மாணவன் சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: