×

இரும்பு கம்பிகள் கால்களை குத்தி கிழித்தது ‘கில்லர்’ படப்பிடிப்பில் விபத்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா படுகாயம்

சென்னை: தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் பான் இந்தியா படம், ‘கில்லர்’. இப்படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னை பாலவாக்கத்தில் நடந்தது. பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சி அளிக்க, ‘ரோப்’ உதவியுடன் எஸ்.ஜே.சூர்யா சண்டைக் காட்சியில் நடித்தார். அப்போது அவர் ரோப்பை பிடித்தபடி மேலிருந்து கீழே இறங்கும்போது, எதிர்பாராவிதமாக இரும்பு கம்பிகளில் மோதி படுகாயம் அடைந்தார்.

அவரது கால்களை இரும்பி கம்பிகள் குத்தி கிழித்தது. உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, படக்குழுவினர் பதறியடித்து ஓடி வந்தனர். தரையில் ரத்தம் சொட்ட, சொட்ட கடுமையான வலியால் துடித்த எஸ்.ஜே.சூர்யாவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவரது ஒரு காலில் நூலிழையில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.

கிழிந்த சதை பகுதிகளை சேர்த்து 3 தையல்கள் போடப்பட்டது. இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசியபோது, ‘எதிர்பாராமல் விபத்து நடந்துவிட்டது. நான் உயிர் தப்பியது அதிசயம்தான். எனது காலில் ஹேர்கிராக் ஏற்பட்டுள்ளது. 3 தையல்கள் போடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு 15 நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். எனவே, 2 வாரங்களுக்கு படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளேன்’ என்றார்.

Tags : S.J. Suriya ,Chennai ,Pan ,India ,Palavakkam, Chennai ,Peter Hein ,
× RELATED சென்னையில் 12 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்