சென்னை: பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இதற்காக வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாளை (8ம் தேதி) சென்னை ஆலந்தூர் பட்ரோடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைக்கிறார். அதேநேரம், மற்ற மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்கின்றனர்.
பொதுமக்கள் நாளை முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க, வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த டோக்கனில் உள்ள தேதி, நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். அதிகப்பட்சமாக ஒரு நாளைக்கு 200 பேருக்கு பொங்கல் பணம், பொருட்கள் வழங்கப்பட உள்ளது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. வரும் 14ம் தேதிக்குள் ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பை முழுமையாக வழங்கி முடிக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
