சென்னை: தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ராணி மேரி கல்லூரி மாணவியர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 10 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கி வைத்தார்.இந்த திட்ட தொடக்க விழாவில் பேசிய முதல்வர், “மாணவர்களின் திறன், பகுத்தறிவு மற்றும் அறிவியல் பார்வை வளர்ந்தால்தான் சமூக முன்னேற்றமும் புதிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்திலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் காமராசர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி வளாகம் அருகே மாணவியர்களை சந்தித்தார். விலையில்லா மடிக்கணினிகளை பெற்றிருந்த மாணவியர்கள் கையில் மடிக்கணினிகளுடன் நின்று கொண்டிருந்தனர். முதல்வர் வருகையை அறிந்ததும் மாணவியர்கள் உற்சாகம் அடைந்தனர். பின்னர் கல்லூரி வளாகத்திற்குள் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை மாணவியர்கள் ரோஜா மலர்களை வழங்கி வரவேற்று நன்றியை தெரிவித்தனர்.
மாணவிகளுடன் உரையாடிய முதல்வர், வழங்கப்பட்ட மடிக்கணினிகளை கல்விக்காக எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும், ஆன்லைன் வகுப்புகள், மின்னூல்கள், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும், தொழில்நுட்பத்தை பொறுப்புடனும் பயனுள்ளதாகவும் பயன்படுத்த வேண்டும் என்றும், கல்வியே எதிர்காலத்தை மாற்றும் வலிமையான ஆயுதம் என்றும் மாணவியர்களுக்கு அறிவுறுத்தினார்.
சுமார் 10 நிமிடங்கள் மாணவிகளுடன் கலந்துரையாடிய முதல்வர், பின்னர் மாணவியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இந்தச் சந்திப்பு மாணவியர்களிடையே பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து பொருளாதாரத் துறை இரண்டாம் ஆண்டு மாணவி கூறியதாவது: எங்கள் குடும்ப பொருளாதார நிலை காரணமாக மடிக்கணினி வாங்குவது சாத்தியமாகவில்லை. அரசின் இந்தத் திட்டம் எங்கள் படிப்புக்கு பெரிய உதவியாக உள்ளது. ஆன்லைன் வகுப்புகள், போட்டித் தேர்வு தயாரிப்புகள் அனைத்தையும் இனி சுலபமாக படிக்க முடியும்” என்றார்.
