×

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற பொதுமக்களுக்கு அனுமதியில்லை: அரசு மேல்முறையீடு மனு முடித்து வைப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள், பொதுமக்கள் தீபம் ஏற்ற அனுமதியில்லை என்று உத்தரவிட்டு அரசு மேல்முறையீட்டு மனுவை முடித்துவைத்தனர்.
மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம.ரவிக்குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றும் போது தர்கா அருகில் உள்ள தூணிலும் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால், கோயில் நிர்வாகம் தரப்பில், நூற்றாண்டு வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் மட்டம் தீபம் ஏற்றப்பட்டது.

இதை எதிர்த்து உடனடியாக ராம.ரவிக்குமார் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட் மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர்கள் உதவியோடு தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகம் 163 தடை உத்தரவு பிறப்பித்தது. பாஜவினர் மலையில் தீபம் ஏற்ற முற்பட்டபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும், பாஜவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து மறுநாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் எனவும், காவல்துறை உதவியுடன் மலை உச்சியில் தீபத்தை ஏற்றவும் மீண்டும் உத்தரவிட்டார். இந்நிலையில் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், வக்பு வாரியம், தர்கா நிர்வாகம், கோயில் தேவஸ்தானம் மற்றும் அறநிலையத்துறை உள்ளிட்டோர் தரப்பில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீராகதிரவன், ரவீந்திரன் ஆகியோரும், அரசு தரப்புக்காக மூத்த வழக்கறிஞர்கள் ஜோதி, விகாஸ் சிங் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கடந்த டிச. 18ம் தேதி நீதிபதிகள் கேட்டனர். பின்னர் விசாரணை முடித்து தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில், நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் 170 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நேற்று வழங்கினர்.

தீர்ப்பு விபரம்: மலை உச்சியில் உள்ள தூண் கோயில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான இடத்தில் தான் உள்ளது. தேவஸ்தானத்திற்கு சொந்தமான மலை உச்சியில் உள்ள தூணில் தான் தீபம் ஏற்றி இருக்க வேண்டும். ஆனால் அங்கு தீபம் ஏற்றுவதால், இரு சமூகங்கள் இடையே பிரச்னைகள் எழும் என்ற மாநில அரசின் அச்சம் தேவையற்றது. மாநில அரசு இரு சமூகங்களுடைய அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான உறவை மேம்படுத்த வேண்டும். இந்த வழக்கில் மலை உச்சியில் உள்ள தூண் தர்காவிற்கு சொந்தமானது என்ற வக்பு வாரியத்தின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏற்கனவே 1994ம் ஆண்டு நீதிபதி கனகராஜ் உத்தரவில் மாற்று இடம் தேர்வு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளார். அதில், அந்த புதிய இடம் தர்கா சொத்திற்கு 15 மீட்டர் அப்பால் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பின் நோக்கம் இருதரப்பின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பதே. பொதுவாக கார்த்திகை தீபத்திருநாளின் போது உயரமான இடத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமானது. ஏனென்றால் தீபம் பக்தர்கள் அனைவரும் வழிபடுவதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். ஒளி என்பது சிவபெருமானின் உருவகமாகும் என திருமூலர் கூறியுள்ளார். உயர்ந்த இடத்தில் தீபம் ஏற்றுவது தான் சரியாக இருக்கும்.

தீபம் ஏற்ற இடம் இருக்கும்போது அதனை ஏற்க மறுப்பது நியாயமற்றது. ஒவ்வொரு வருடமும் இந்த பிரச்னை எழுந்து வருகிறது. அப்போது இரு தரப்புக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த உத்தரவை பின்பற்றுவதன் மூலம் இரு தரப்பினர் இடையே பிரச்னைகளை நீக்கி, சமூக ஒற்றுமை ஏற்படுத்தப்படும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. எனவே, மலை உச்சியில் தர்கா அருகேயுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் போது தொல்லியல் துறையின் உரிய சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டும்.

வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில் நிர்வாகம் மலை உச்சியில் தர்கா அருகே தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் போது பொதுமக்கள் யாரையும் அனுமதிக்க கூடாது. தீபம் ஏற்ற எத்தனை பேர் செல்ல வேண்டும் என்பதை தொல்லியல் துறையினர் முடிவு செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டரின் மேற்பார்வையில் மாநகர காவல் துறையின் பாதுகாப்பில், கோயில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும். இந்த உத்தரவுகளை மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும், நிறைவேற்றி இரு தரப்பினர் இடையே நட்பு பாலத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர். கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றி வந்த சூழலில் இனி, புதிதாக தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த வழக்கில் மலை உச்சியில் உள்ள தூண் தர்காவிற்கு சொந்தமானது என்ற வக்பு வாரியத்தின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
* வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில் நிர்வாகம் மலை உச்சியில் தர்கா அருகே தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் போது பொதுமக்கள் யாரையும் அனுமதிக்க கூடாது.
* தீபம் ஏற்ற எத்தனை பேர் செல்ல வேண்டும் என்பதை தொல்லியல் துறையினர் முடிவு செய்ய வேண்டும்.
* மாவட்ட கலெக்டரின் மேற்பார்வையில் மாநகர காவல் துறையின் பாதுகாப்பில், கோயில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும்.

Tags : Thiruparankundram hill ,Madurai ,Thiruparankundram ,Rama. Ravikumar ,Egumalai, Madurai district ,Court Madurai… ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்