- ஒருங்கிணைந்த மேலாண்
- சென்னை
- துணை தலைவர்
- உதயநிதி ஸ்டாலின்
- துணை
- முதல் அமைச்சர்
- ஒருங்கிணைந்த மேலாண்
- நீர்வளத் துறை
- நீர்துறைத்துறை
சென்னை: நீர்வளத் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள சென்னை குடிநீர் வழங்கல் நீர்த்தேக்கங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் நீர்வளத்துறையின் சார்பில் 32.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “சென்னை குடிநீர் வழங்கல் நீர்த்தேக்கங்களுக்கான நீரியல் தரவு கண்காணிப்பு மற்றும் நீர்த்தேக்க மேலாண்மை தீர்வு திட்டத்தை” செயல்படுத்துவதற்கு உத்தரவிட்டார்.
இத்திட்டத்தின் மூலம் செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் மற்றும் பூண்டி நீர்த்தேக்கங்களின் மதகு செயல்பாடுகளை தானியக்கமாக்கி, சென்னை நேப்பியர் பாலம் கூவம் முகத்துவாரம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த நீர்த்தேக்க மேலாண்மை மையம் – ஸ்கேடாவிலிருந்து (Supervisory Control and Data Acquisition) கண்காணிக்கவும் இயக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக 1088 சதுர மீட்டர் (11,708 சதுர அடி) பரப்பளவில் ஒருங்கிணைந்த நீர்த்தேக்க மேலாண்மை மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் மற்றும் பூண்டி ஆகிய இடங்களில் துணைக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட இடங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு மழைக்காலங்களில் வெள்ள நீர், நீர்த்தேக்கத்திற்கு வருவதை முன்கூட்டியே அறிந்து, நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் அளவினை கணக்கில் கொண்டு, வெள்ளக் கதவுகளை (மதகுகளை) சரியான நேரத்தில் முறையாக திறக்கவும், சென்னையில் இருந்தே கண்காணிக்கவும், கதவுகளை திறந்து மூடவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வருங்காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள 90 அணைகளையும் சென்னையிலுள்ள இந்த மையத்திலிருந்தே கண்காணிக்கவும், இயக்கவும் திட்டம் வகுத்து செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் வழங்கல் நீர்த்தேக்கங்களுக்கான நீரியல் தரவு கண்காணிப்பு மற்றும் நீர்த்தேக்க மேலாண்மை தீர்வு திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீர்த்தேக்க மேலாண்மை மைய கட்டடத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்த கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள மிகப்பெரிய எல்.ஈ.டி திரையின் மூலமாக சென்னையிலுள்ள செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் மற்றும் பூண்டி ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு குறித்தும், நீர் வெளியேற்றம் குறித்தும் ஏரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கணிணி மூலமாக சம்பந்தப்பட்ட ஏரிகளில் குறிப்பிட்ட எண் மதகுகளை திறந்தும், நீர் வெளியேற்றத்தை நிறுத்த முடிகின்றதா என்றும் கணிணி மூலம் இயக்கி பரிசோதனை செய்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நீர்வளத்துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
