நெல்லை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் இன்று பொங்கல் விற்பனை களைக்கட்டியது. ஆட்டு கிடாக்கள் மற்றும் சேவல்கள் விற்பனை இன்று அதிகளவில் நடந்தது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினத்தன்று அறுசுவை படையல்களோடு சைவ விருந்து உண்ணும் பெரும்பான்மையான தமிழர்கள், மறுநாள் கரிநாள் அன்று பொங்கல் சோற்றுடன் ஆட்டுக்கறி சமைத்து உண்பது வழக்கமாக உள்ளது. கரிநாளான மாட்டு பொங்கல் தினத்தன்று சமைப்பதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே இன்று மேலப்பாளையம் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற சந்தைகளில் ஒன்றான மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் இன்று பொங்கல் பண்டிகைக்கான ஆடுகள் விற்பனை அதிகாலை முதலே களைக்கட்டியது. ஆடுகளை சந்தைக்குள் கொண்டு செல்ல மாநகராட்சி தரப்பிலிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. ஆடுகளை வாங்குவதற்காக பொதுமக்களும், கறிக்கடைக்காரர்களும் குவிந்தனர். செம்மறி ஆடு, வெள்ளாடுகள் என பல வகை இன ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தாலும், வெள்ளாடுகளுக்கு அதிக ‘டிமாண்ட்’ இருந்தது. ஆட்டின் உயரம், கறியின் அளவு, எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டது. கறியின் எடை அதிகரிக்க, அதிகரிக்க விலையும் உயர்ந்து காணப்பட்டது.
கறியைப் பொறுத்து ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரம் வரை விலை போனது. மேலப்பாளையம் சந்தைக்கு வெளியே நாட்டுக்கோழிகள் மற்றும் சேவல்களின் விற்பனையும் நன்கு களைக்கட்டியிருந்தது. பொங்கலுக்கு மறுதினம் கோழிக்கறி சாப்பிடுவோர் தங்கள் தேவைக்கேற்ப எடைக்கேற்ப கோழிகளை வாங்கி சென்றனர். தேனி, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் மொத்தமாக ஆடுகளை வாங்கி சென்றதோடு, வெளிப்பகுதிகளில் கோழிகளை 5 முதல் 10 வரை மொத்தமாக அள்ளிச்சென்றனர். அடுத்தவாரம் வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை என்பதால், இன்றைய தினமே நல்ல வியாபாரம் கிட்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் விற்பனை குறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகையை ஒட்டி மற்ற வாரங்களை விட இந்த வாரம் விற்பனை அதிகம் காணப்பட்டது. அதேசமயம் கறிக்காரர்களை விட பொதுமக்களே இன்று அதிகம் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி சென்றனர். பொங்கலுக்கு இன்னமும் ஒரு வாரம் இருப்பதால், அதுவரை கறிக்கடைக்காரர்கள் ஆடுகளை தீவனம் போட்டு பராமரிக்க விரும்பவில்லை. அவர்கள் அடுத்தவாரம் பொங்கலையொட்டி ஆடுகளை வாங்கி கொள்ள திட்டமிட்டுள்ளனர். பொதுமக்களும், வியாபாரிகளும் பொங்கலை கணக்கில் கொண்டு இன்று தேவைக்கேற்ப ஆடுகளை வாங்கி சென்றனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு பொங்கலை முன்னிட்டு அதிக ஆடுகள் விற்பனையாகின’’ என்றனர்.
ஒரு ஆட்டின் விலை ரூ.50 ஆயிரம்
நெல்லை மேலப்பாளையம் சந்தையில் மதுரையை சேர்ந்த ஒரு வியாபாரி நல்ல வாட்ட சாட்டமான இரு ஆடுகளை கொண்டு வந்திருந்தார். இரு ஆடுகளையும் சேர்த்து வாங்கினால் விலை ரூ.80 ஆயிரம் என கூவி, கூவி விற்பனை செய்தார். ஒரு ஆட்டை மட்டும் தனியாகக வாங்கினால் ரூ.50 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்தார். அந்த ஆட்டின் நல்ல உடல்வாகுவை வியாபாரிகள் அடிக்கடி வந்து பார்த்து சென்றனர்.
