×

தாராபுரம் அருகே இரும்பு உருக்காலை அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் மறியல்

 

தாராபுரம்: தாராபுரம் அருகே இரும்பு உருக்காலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த வடுகபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது காதபுள்ள பட்டி கிராமம். இங்கு கட்டப்பட்டு வரும் உருக்காலையில் பழைய இரும்புகளை உருகி அதை புதிதாக வார்த்தெடுக்கும் ஆலையை துவங்க தனியார் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆலை கழிவு நீரால் அப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதுடன், விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் பாதிக்கப்படும், ஆலையை கட்ட அனுமதிக்க கூடாது என கூறி அப்பகுதி சுற்றுவட்டார கிராம மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், பல கட்ட போராட்டங்களுக்கு பின் கட்டுமான பணியை நிறுத்தி வைத்தனர்.

இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வருகிற 19ம் தேதிக்குள் ஆலை கட்ட அனுமதி கொடுப்பதா? அல்லது மறுப்பதா? என ஊராட்சி நிர்வாகம் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் கெடு விதித்தது. இந்த நிலையில் குண்டடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வடுகபாளையம் ஊராட்சியில் அனுமதி பெறாமல் ஆலையை கட்ட அனுமதி கொடுக்கக்போவதாக தகவல் அறிந்த அப்பகுதி கிராம மக்கள் ஆலை கட்டுமான பணி தொடர அனுமதிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் கலந்து ஆலோசித்து பதில் அளிப்பதாக அவர் கூறிச் சென்றார்.

ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால் ஆத்திரமடைந்த 200க்கும் கிராம மக்கள் குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று மாலை இரும்பு உருக்கு ஆலைக்கு எதிராக கோஷமிட்டவாறு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவயிடத்துக்கு தாராபுரம் டிஎஸ்பி சுரேஷ்குமார், தாசில்தார் ராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி உரிய முடிவை அறிவிப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராம மக்கள் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Tarapuram ,Tarapura ,Tiruppur district ,Tharapuram ,Northern Cape ,Kathapullah Patti ,
× RELATED சென்னையில் 12 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்