×

கடையல் அருகே பரபரப்பு; கோதையாற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

 

அருமனை: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் மீண்டும் முதலை நடமாட்டம் இருப்பதை பொதுமக்கள் பார்த்து வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் கடையல் பேரூராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தோட்டாவரம் செங்குழிக்கரை பகுதியில் கோதையாற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள ஆற்றில் பொதுமக்கள் குளிக்க செல்வதும் வழக்கம். நேற்று மாலையில் அந்த பகுதியில் பொதுமக்கள், வாலிபர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது உறைகிணறு மேல் ஏதோ ஒன்று கிடப்பதை சிலர் பார்த்தனர். சிறிது நேரத்துக்கு பின் அது முதலை என்பது தெரிந்தது.

சிறிது நேரம் அப்படியே கிடந்தது. இதை அந்த பகுதியில் நின்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். சிறிது நேரத்துக்கு பின் நகர்ந்து முதலை தண்ணீரில் விழுந்தது. இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உளளது. ஏற்கனவே வாரம், கோதையாற்றில் திற்பரப்பு அருகே முதலை கிடப்பதை ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் பார்த்தனர். பேச்சிப்பாறை அணை பகுதியில் இருந்து தான் கோதையாற்றுக்கு தண்ணீர் வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து சுமார் 500 கன அடி வீதம் தினமும் திறந்து விடப்படுகிறது. இதனால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.

எனவே மலையோர பகுதிகளில் இருந்து பேச்சிப்பாறைக்கு தண்ணீர் வருகிறது. கடந்த நவம்பரில் டித்வா புயல் காரணமாக மலை பகுதிகளில் கன மழை இருந்து காட்டாற்று வெள்ளம் அதிகரித்தது. எனவே இந்த வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட முதலை, கோதையாற்றில் கிடக்கலாம் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். கோதையாற்றில் தொடர்ந்து முதலை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து களியல் வனச்சரகர் முகைதீனிடம் கேட்ட போது, கோதையாற்றில் நாங்கள் ஏற்கனவே ஆய்வு செய்து உள்ேளாம். ஆனால் முதலைக்கான தடயங்கள் இல்லை. ஏற்கனவே 2, 3 வருடங்களுக்கு முன் முதலை பார்த்ததாகவும் சொல்கிறார்கள். அதன் பின்னர் எந்த தடயமும் இல்லை. கோதையாற்றுக்கு பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் வருகிறது.

பேச்சிப்பாறை அணையில் முதலை இருந்ததற்கான எந்த வித தடயமும் கிடைக்க வில்லை. மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். முதலை தண்ணீர், நிலத்தில் வாழும் தன்மை கொண்டது. நிலம் என்றால், நீர் பரப்பையொட்டி உள்ள நிலத்தில் முதலை நடமாட்டம் இருக்கும். கோதையாற்றில் நில பகுதியில் முதலை வந்ததற்கான தடயங்கள் இல்லை.
வனத்துறை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவருடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். தடயங்கள் எதுவும் இல்லாமல் வனத்துறை எதுவும் செய்ய முடியாது. இதற்கு முன் கிடைத்த வீடியோவில் முதலை குட்டியாக இருந்தது. தற்போது உள்ள வீடியோவில் சற்று பெரிதாக தெரிகிறது. எனவே எதையும் ஆராயாமல் சொல்ல முடியாதுஎன்றார்.

Tags : Kadayal ,Kodaiyar ,Arumanai ,Kanyakumari district ,Kadayal Town Panchayat ,Senguzhikarai ,Thottavaram… ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்