×

சுற்றுலா வாகனங்களின் வருகையை குறைத்து: மாசுபாட்டை கட்டுப்படுத்த உதவும் இ-பாஸ் முறை

 

ஊட்டி: நீலகிரியில் இ-பாஸ் முறை அமல்படுத்திய பிறகு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகனங்களின் வருகை குறைந்து, மாசுபடுவதை கட்டுப்படுத்தியுள்ளது. நீலகிரிக்கு சுற்றுலா வாகனங்கள் நுழைவதற்கு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடைமுறை, காரணமாக சுற்றுலா வாகனங்களால் மலைப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் புகையிலிருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் உதவியுள்ளது.

2025ம் ஆண்டில், சுமார் 20.35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கிடுவதற்கு (விகிதாசாரமாக) எடுத்துக்கொள்ளப்படுகிறது. 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 லட்சம் வரை இருந்தது. கொரோனா நோய் பாதிப்பு காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் சுற்றுலா பயணிகளின் வருகை 10 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. 2022ம் ஆண்டு 25 லட்சம் மற்றும் 2023ம் ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை 28 லட்சமாக அதிகரித்தது. ஆனால், 2024ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்திற்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.

இதனால், அந்த ஆண்டு 24 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்தனர். 2025ம் ஆண்டு மேலும் சரிந்து 20.35 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்தனர். இது 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 3.66 லட்சம் பேர் குறைவாகும். இ-பாஸ் முறை நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் நுழைவை வெகுவாக குறைத்துள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘2 ஆண்டுக்கு முன்பு நடைமுறைபடுத்தப்பட்ட இ-பாஸ் முறை 2 ஆண்டுகளில், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 8 லட்சமாக குறைந்துள்ளது. இது நீலகிரியில் கார்பன் உமிழ்வை குறைக்க உதவுகிறது. பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து வசதிகளுக்கு மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வனப்பகுதி, வனவிலங்குகள் பாதுகாக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

Tags : Nilgiri ,Ooty ,
× RELATED சென்னையில் 12 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்