நியூயார்க்: அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பதவியிழந்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் இருவரும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முதல் முறையாக நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தலை ஊக்குவித்ததாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது குற்றம்சாட்டி, கடந்த 3ம் தேதி அமெரிக்க ராணுவம் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், அதிபர் மதுரோவையும், அவரது மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க படையால் கைது செய்யப்பட்டு ரகசியமாக நாடு கடத்தப்பட்டனர். நியூயார்க் அழைத்து வரப்பட்ட இவர்கள் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதிபர் மதுரோ, அவரது மனைவி மீதான போதைப் பொருள் கடத்தல் வழக்கு நியூயார்க் தெற்கு மாவட்ட பெடரல் நீதிமன்றத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இதற்காக மதுரோ, புளோரஸ் இருவரும் சிறையிலிருந்து மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்தவழக்கில், வேறொரு நாட்டின் தலைவரான தனக்கு எதிராக வழக்கு தொடருவதில் இருந்து விலக்கு உண்டு என மதுரோ தரப்பில் வாதாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1990ல் ராணுவ நடவடிக்கை மூலம் அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட பனாமா சர்வாதிகாரி மானுவல் நோரிகா இதே போன்ற வாதத்தை முன்வைத்து தோல்வி அடைந்தார்.
ஆனால், மதுரோவை பொறுத்த வரை 2024ல் அவர் வெற்றி பெற்ற அதிபர் தேர்தலை முறையான தேர்தலாக அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. எனவே இது மதுரோவுக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும். முன்னதாக நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட 25 பக்க குற்றப்பத்திரிகையில் மதுரோ மற்றும் பிறர் போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான டன் கொகனை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், மதுரோவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
* அமெரிக்காவிடம் பணிந்த இடைக்கால அதிபர் டெல்சி
மதுரோவுக்கு பிறகு அவரது துணை அதிபரான டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவின் புதிய இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார். நேற்று முன் தினம் வரையிலும் நாட்டின் ஒரே அதிபர் மதுரோ மட்டுமே, அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டேன் என பேசி வந்த ரோட்ரிக்ஸ் திடீரென அமெரிக்காவுக்கு பணிந்துள்ளார். நேற்று முன்தினம் மாலையில் தனது சமூக ஊடக பதிவில் ரோட்ரிக்ஸ், அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையே சமநிலையான மற்றும் மரியாதைக்குரிய உறவை நோக்கி நகர்வதை முன்னுரிமையாகக் கருதுவதாக கூறி உள்ளார். வளர்ச்சியை நோக்கிய ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தில் இணைந்து செயல்படுமாறு அமெரிக்காவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
