மத்திய கிழக்கில் 6வது நாளாக நீடிக்கும் போர்; இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது ஈரான்: அஜர்பைஜான், கத்தார், ஈராக் மீதும் தாக்குதல்

* இதுவரை பலி; ஈரான் 1230 பேர்: இஸ்ரேல் 11 பேர் அமெரிக்கா 6 பேர் லெபனான் 70 பேர்

துபாய்: மத்திய கிழக்கில் 6வது நாளாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசி சரமாரி தாக்குதலை ஈரான் நேற்று நடத்தியது. ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்கியதில் அவர் பலியானார். இதனால் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக வளைகுடா பகுதியில் அமெரிக்க படைகளின் முகாம்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடைய இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே இந்தியாவுக்கு வந்து சென்ற ஈரான் போர் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் அழித்தது.

இதில் 87 பேர் பலியானார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ஈரான் ஆறாவது நாளாக மத்திய கிழக்கில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா போராளிக் குழுவை குறிவைத்து லெபனானில் புதிய தாக்குதல்களைத் தொடங்கியதாக இஸ்ரேல் ராணுவம் கூறிய சிறிது நேரத்திலேயே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் வான்வழி சைரன்கள் ஒலித்தன.

இதையடுத்து இஸ்ரேலில் உள்ள அத்தியாவசிய வணிகங்களைத் தவிர அனைத்து வளாகங்கள், கல்விக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூடும் படி இஸ்ரேல் உத்தரவிட்டது. மேலும் அலுவலகம் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஈரான் நடத்திய தாக்குதலில் குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 20 அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் அஜர்பைஜான் விமான தளம், கத்தாரில் உள்ள அமெரிக்க தளம், ஈராக் கடற்பகுதியில் உள்ள எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதை தொடர்ந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது உக்கிரமாக தாக்குதலை தொடங்கின. இதையடுத்து ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நேற்று நடக்க இருந்த இரங்கல் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி அறிவித்தது. ஈரானின் துணை ராணுவப் புரட்சிகர காவல்படை மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளில் உள்ள ராணுவ மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பை முற்றிலுமாக அழிக்கப்போவதாக எச்சரித்துள்ளன.

இதையடுத்து தோஹாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் வசிப்பவர்களை தற்காலிக முன்னெச்சரிக்கையாக அதிகாரிகள் வெளியேற்றி வருவதாக கத்தாரின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நகரமான துபாயில் நேற்று காலை போர் விமானங்களின் பயணம் அதிகரித்தது. குவைத் கடற்கரையில் ஒரு வணிககப்பல் தாக்குதலுக்கு உள்ளானது.

ஜோர்டானின் எல்லையில் உள்ள அல்-ஜாப் மாகாணத்தில் ஒரு டிரோனை தாக்கி அழித்ததாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. லெபனானின் வடக்கே உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு லெபனானில் உள்ள கடலோர நெடுஞ்சாலையில் ஒரு வாகனத்தை குறிவைத்து இஸ்ரேலிய டிரோன் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

* இலங்கை கடற்பகுதியில் காத்திருக்கும் இரண்டாவது ஈரானிய கப்பல்
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் இலங்கை கடற்பரப்பில் ஈரான் போர்க்கப்பல் ஐஆர்ஐஎஸ் தேனா மூழ்கடிக்கப்பட்டது. இதில் 87 பேர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் இலங்கை கடற்பகுதியில் நுழைய அனுமதி கேட்டு இரண்டாவது ஈரான் கப்பல் காத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதை இலங்கை அரசு செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸா உறுதிப்படுத்தினார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் கூறுகையில்,’நாங்கள் அதை அறிந்திருக்கிறோம். அந்த கப்பலில் உள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். பிராந்திய அமைதியைப் பாதுகாக்க இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாங்கள் தலையிடுகிறோம். இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கையின் விரிவாக்கப்பட்ட பொருளாதார மண்டல பகுியில் காத்திருக்கிறது. அவசர உதவி கோரியுள்ளது’ என்றார்.

* வாரத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி செலவழிக்கும் இஸ்ரேல்
ஈரான் மீதான போர் நீடித்தால் இஸ்ரேல் வாரத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி செலவழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்று இஸ்ரேலிய நிதி அமைச்சகம் எச்சரித்துள்ளது.

* புதிய உச்ச தலைவரை ஈரான் இன்னும் தேர்வு செய்யவில்லை
கடந்த வாரம் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியின் வாரிசை புதிய உச்ச தலைவராக ஈரான் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை என்று ஈரானிய மூத்த அதிகாரியும், இந்தியாவில் உள்ள ஈரான் பிரதிநிதியுமான அயதுல்லா டாக்டர் அப்துல் மஜீத் ஹக்கீமெலாஹி தெரிவித்தார். அயதுல்லா கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி அவரது வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என்றும் அவர் மறுத்தார். இது தொடர்பான விவாதம் நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

* அமெரிக்கா செய்தது தவறான முன்னுதாரணம்
இலங்கைக்கு அருகே ஈரான் போர் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்தது தவறான முன்னுதாரணம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ ஈரான் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது. கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ப்ரிகேட் தேனா, சர்வதேச நீரில் எச்சரிக்கை இல்லாமல் தாக்கப்பட்டது. என் வார்த்தைகளைக் கவனியுங்கள்: அமெரிக்கா தான் ஏற்படுத்திய முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்படும்’ என்றார்.

* ஈரானை தாக்க தயாராகும் குர்திஷ் அதிருப்தி குழுக்கள்
வடக்கு ஈராக்கை தளமாகக் கொண்ட குர்திஷ் ஈரானிய அதிருப்தி குழுக்கள், அமெரிக்கா ஆதரவுடன் ஈரானில் எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைக்குத் தயாராகி வருகின்றன. குர்திஷ் குழுக்களிடம் ஆயிரக்கணக்கான பயிற்சி பெற்ற போராளிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் போரில் நுழைவது தெஹ்ரானில் உள்ள போரில் சிக்கியுள்ள அதிகாரிகளுக்கு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கலாம். மேலும் ஈராக்கை மேலும் மோதலில் இழுக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் எல்லையை மூட ஈராக் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* ரத்தம் சிந்த வாருங்கள்
இஸ்ரேலியர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக ரத்தம் சிந்த வரும்படி ஈரான் ஆயத்துல்லா அப்துல்லா ஜவதி அமோலி விடுத்த செய்தியை ஈரான் அரசு தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது. அதில்,’ நாம் இப்போது ஒரு பெரிய சோதனையின் விளிம்பில் இருக்கிறோம். நாம் கவனமாக இருக்க வேண்டும். சியோனிச ரத்தம் சிந்தப்பட வேண்டும், டிரம்பின் ரத்தம் சிந்தப்பட வேண்டும்’ என்றார்.

* அஜர்பைஜான் மீது டிரோன் தாக்குதல்
அஜர்பைஜான் மீது ஈரான் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்த நாடு அறிவித்துள்ளது. நக்சிவன் புறநகர்ப் பகுதியில் ஈரான் டிரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. நக்சிவனில் உள்ள விமான நிலையத்திற்கு அருகிலும், மற்றொன்று ஒரு பள்ளிக்கு அருகிலும் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அஜர்பைஜானை குறிவைத்ததாக ஈரான் ஒப்புக் கொள்ளவில்லை. இலக்கு மாறி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறி சமாளித்துள்ளது.

* ஈரான் மீதான போரால் பாதிக்கப்பட்ட நாடுகள்
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் தாக்குதல் அதற்கு பதிலடியாக ஈரான் நடத்தி வரும் தாக்குதல் தற்போது மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் விரிவடைந்து விட்டது. இதனால் ஒவ்வொரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விவரம்:

* ஈரான் இறப்பு எண்ணிக்கை: ஈரானின் தியாகிகள் மற்றும் படைவீரர் விவகாரங்களுக்கான அறக்கட்டளையின் படி, குறைந்தது 1,045 பேர். எத்தனை பொதுமக்கள் என்பது தெரியவில்லை. வான்வெளி: மூடப்பட்டது.

* இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகள் இறப்பு எண்ணிக்கை: முக்கிய உயிரிழப்பு சம்பவங்கள்: பெய்ட் ஷெமேஷில் நடந்த ஒரு தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். சேதம் மற்றும் பாதிப்பு: பல இடங்கள் – அவற்றில் பெய்ட் ஷெமேஷில் உள்ள ஒரு ஜெப ஆலயம் மற்றும் பொது தங்குமிடம், டெல் அவிவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடம், ஜெருசலேமில் உள்ள ஒரு சாலை – ஈரானிய ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன. வான்வெளி: மூடப்பட்டது.

* சிரியா
சிரியாவின் தெற்கு மாகாணங்களில் சில பகுதிகளில் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணைகளிலிருந்து ஏவுகணைச் சிதறல்கள் விழுந்ததாகவும், கூடுதல் காயங்கள் அல்லது பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
வான்வெளி: மூடப்பட்டது.

* ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
உயிரிழப்புகள்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 68 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்கம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வான்வெளியில் 800 க்கும் மேற்பட்ட ஈரானிய டிரோன்கள் நுழைந்துள்ளன. அவற்றில் 57 டிரோன்கள் இலக்கை தாக்கின. 186 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று மட்டுமே இலக்கை தாக்கியது. மற்றவை அழிக்கப்பட்டன. எட்டு குரூஸ் ஏவுகணைகளையும் வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்தனர்.
வான்வெளி: பகுதியளவு மூடப்பட்டது.

* கத்தார்
சேதம் மற்றும் தாக்கம்: கத்தாரில் உள்ள எரிசக்தி வசதிகளை ஈரான் தாக்கியுள்ளது. ஈரான் அதன் மீது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும், ஒன்று அல்-உதெய்த் கத்தார் தளத்தைத் தாக்கியதாகவும், ஆனால் அது உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை என்றும் கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வான்வெளி: மூடப்பட்டது.

* ஓமன்
உயிரிழப்புகள்: சுல்தானகத்தின் தலைநகரான மஸ்கட் கடற்கரையில் மார்ஷல் தீவுகளின் கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கர் மீது குண்டு வீசியதில் ஒரு இந்திய கடற்படை வீரர் கொல்லப்பட்டார். ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் டேங்கர் தாக்கப்பட்டதில் மேலும் நான்கு கடற்படை வீரர்கள் காயமடைந்ததாக அரசு நடத்தும் ஓமன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. யார் தாக்குதலை நடத்தினர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஜலசந்தியை நெருங்கும் கப்பல்களை ஈரான் அச்சுறுத்தி வருகிறது.

சேதம் மற்றும் தாக்கம்: ஓமன் நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான சலாலா மற்றும் டுக்ம் துறைமுகத்தையும் டிரோன் தாக்குதல்கள் குறிவைத்துள்ளன. வான்வெளி: திறந்திருக்கும், ஆனால் பல வணிக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. மஸ்கட் விமான நிலையம் வெளியேற்ற விமானங்களுக்கான தளமாக மாறியுள்ளது.

* ஈராக் உயிரிழப்புகள்: அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தளங்கள் மீது நடத்திய தாக்குதல்களில் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் எத்தனை பேர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. வான்வெளி: மூடப்பட்டது.

* குவைத்
இறப்பு எண்ணிக்கை: குவைத்தில் குறைந்தது எட்டு பேர் இறந்துள்ளனர். 32 பேர் காயமடைந்தனர்.
வான்வெளி: மூடப்பட்டது

* சைப்ரஸ்
சேதம் மற்றும் தாக்கம்: மத்தியதரைக் கடல் தீவில் உள்ள ஒரு பிரிட்டிஷ் விமானத் தளம் போரில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

* ஜோர்டான்
சேதம் மற்றும் தாக்கம்: ஈரான் ஏவுகணைகள் வான்வெளியில் இடைமறித்து அழிக்கப்பட்டு வருகின்றன.
வான்வெளி: திறந்திருக்கும், ஆனால் பல விமான நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன.

* எகிப்து
சேதம் மற்றும் தாக்கம்: போரின் எகிப்தின் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. ஏனெனில் உலகளாவிய கப்பல் நிறுவனங்கள் சூயஸ் கால்வாயிலிருந்து கப்பல் கடற்படைகளை வேறு பாதைக்கு மாற்ற முடிவு செய்துள்ளன. மத்தியதரைக் கடல் மற்றும் செங்கடல்களை இணைக்கும் இந்தக் கால்வாய், வெளிநாட்டு நாணயத்தின் முக்கிய ஆதாரமாகும். வான்வெளி: வணிக விமானங்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

* சவுதி அரேபியா
சேதம் மற்றும் தாக்கம்: போர் தொடங்கியதிலிருந்து சவுதி மீது ஏவப்பட்ட 9 டிரோன்களைப் படைகள் இடைமறித்து அழித்துள்ளதாக சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஈரான் இரண்டு டிரோன்களால் தாக்கியது. சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் டிரோன்களால் தாக்கப்பட்டது. வான்வெளி: ஈராக் மற்றும் பாரசீக வளைகுடாவின் எல்லையில் உள்ள பகுதியில் பகுதியளவு மூடப்பட்டுள்ளது.

* துருக்கி
சேதம் மற்றும் தாக்கம்: ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை துருக்கியின் வான்வெளியை நோக்கிச் சென்றபோது நேட்டோ பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈராக் மற்றும் சிரிய வான்வெளியைக் கடந்த பிறகு ஏவுகணை கண்டறியப்பட்டதாகவும், கிழக்கு மத்தியதரைக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள நேட்டோ பிரிவுகளால் இடைமறிக்கப்பட்டதாகவும் அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

* பஹ்ரைன்
உயிரிழப்புகள்: 2 பேர் பலி; மேலும் இருவர் காயமடைந்தனர்.
சேதம் மற்றும் தாக்கம்: நாட்டில் உள்ள அமேசான் தரவு மையங்களில் ஒன்றின் அருகே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமேசான் தெரிவித்துள்ளது. வான்வெளி: மூடப்பட்டது.

* லெபனான்
இறப்பு எண்ணிக்கை: ஏழு குழந்தைகள் உட்பட 72 பேர் கொல்லப்பட்டனர். 437 பேர் காயமடைந்தனர்.
தாக்கம்: லெபனானில் குறைந்தது 84,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். எல்லையில் சிரியப் படைகள் குவிந்து வருவதால் பதட்டங்கள் அதிகமாக உள்ளன. வான்வெளி: லெபனானின் வான்வெளி முழுமையாக மூடப்படவில்லை. விமானங்கள் வந்து செல்கின்றன, ஆனால் பல விமான நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன.

* இலங்கை
சேதம் மற்றும் தாக்கம்: இலங்கையின் பிராந்தியத்தில் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கை கடற்படை 32 பேரை மீட்டுள்ளது. 87 பேர் பலியானார்கள். அதில் 180 பேர் இருந்தனர். மீதம் உள்ளவர்களை தேடும்பணி நடக்கிறது.

 

Related Stories: