பெரம்பலூர், ஜன. 6: நெடுவாசல் கிராம மலையடிவாரத்தில் கிரஷர் அமைப்பதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் தாலுகா, கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட நெடுவாசல் மலையடிவாரத்தில் தனியார் நிறுவனம் சார்பில் எம்சாண்ட் உற்பத்தி செய்யும் ஆலை இயங்கி வருகிறது. அந்த அந்த ஆலையால் கிராமம் முழுவதும் புழுதி படர்ந்து வருவதாகவும், இதனால் கிராமத்தில் உள்ள பலருக்கும் மூச்சு தினறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்நாள் கூட்டத்திற்கு வந்த கிராமக்கள் இது தொடர்பாக கலெக்டர் மிருணாளியிடம் மனு அளித்தனர். ஏற்கனவே எம்சாண்ட் நிறுவனத்தின் புழுதியால் அவதிப்பட்டு வரும் நிலையில் அதே பகுதியில் பெரிய அளவில் கிரஷர் ஒன்றும் அமைக்கப்பட இருப்பதாகவும், இதனால் மேலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் எனக் கூறி, கிரஷர் அமைப்பதை தடுத்து நிறுத்தவும் வேண்டும் என கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
