காட்டுயானைகள் அட்டகாசம் வாழைத்தோட்டம் சேதம்

சத்தியமங்கலம், ஜன.24: பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து(58) என்பவர் தனது விவசாய தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் ஜி 9 ரக வாழை பயிரிட்டு உள்ளார். தற்போது இவை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. நேற்று அதிகாலை  பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 5 காட்டு யானைகள் காளிமுத்துவின் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.

யானைகள் வாழைத் தோட்டத்திற்கு புகுந்ததால் 200க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.  விவசாயி காளிமுத்து  தனது தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது யானைகள் வாழைகளை சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இப்பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுந்து வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதால் யானைகள் வனத்தை விட்டு வெளியே வராமல்  தடுக்க வனப்பகுதியை ஒட்டி அகழி வெட்ட வேண்டும் என பவானிசாகர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: