தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வரும் அமித்ஷாவை சந்திக்காமல் எடப்பாடி திடீர் புறக்கணிப்பு? அதிமுக பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்: டெல்லி மேலிடம் கடும் கோபம்

சேலம்: தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்காமல் புறக்கணிக்க முடிவு செய்து உள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுக்கூட்டங்களில் அடுத்தடுத்த நாட்களில் பங்கேற்கிறார். கூட்டணியை இறுதி செய்ய திட்டமிட்ட டெல்லி மேலிடம், எடப்பாடியின் இந்த செயலால் கடும் கோபத்தில் உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் இன்னும் 3 மாதத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தற்போதே கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டன.

அதிமுகவை பொறுத்தவரையில் மிகப்பெரிய கூட்டணியை அமைப்பேன் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால் தற்போதைய நிலவரப்படி அதிமுகவில் பாஜ, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டுமே உள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறிய டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டனர். இவர்கள் இருவரால் எந்த நன்மையும் இல்லை என கூறி வந்த எடப்பாடி பழனிசாமி தற்போது அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதே நேரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டணியை அறிவிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். ஆனால் அவரால் கூட்டணியை அறிவிக்க முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இதற்கிடையில் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாஜக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை (4ம் தேதி) உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வருகிறார். மறுநாள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்கிறார். அப்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்பட்டு வந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி குறித்து பேசுவார் எனவும் தகவல் பரவியது. ஆனால் கடந்த ஒருவாரமாக சென்னையில் முகாமிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து இன்று பகல் விமானம் மூலம் சேலம் வருகிறார்.

4ம் தேதி (ஞாயிறு) சேலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும், 5ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடக்கும் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார். குறிப்பாக, 4ம் தேதி மாலை புதுக்கோட்டையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார். அதே நேரத்தில்தான் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மறுநாளும் (5ம் தேதி) திருச்சியில் அமித்ஷா பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். அந்த நேரத்தில் சேலத்தில் தங்க உள்ள எடப்பாடி பழனிசாமி, அன்று மாலை கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டு செல்கிறார். எனவே, தமிழகம் வரும் உள்துறை அமைச்சரை எடப்பாடி சந்திக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘ஓ.பன்னீர்செல்வம் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்தக்கட்ட முடிவை அறிவிக்க இருந்தார். ஆனால் சசிகலாவின் உறவினர் மூலமாக தொடர்பு கொண்ட டெல்லி பாஜ, அவரது முடிவை 2 வாரம் தள்ளிபோடுமாறு கூறியது. இதையடுத்து அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அமைதியாகி விட்டார். இதுவரை பாஜ கூறியதை எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. இதனால் கூட்டணி அமையாத நிலை இருக்கிறது. இம்முறை கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

அதுவும் மிகுந்த கோபத்துடன் வருகிறார். ஆனால் அவரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. இதன் காரணமாக அவர் சேலத்திற்கு வருகிறார். அமித்ஷா தங்கியிருக்கும் 2 நாட்களும் எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனால் அமித்ஷாவுடனான சந்திப்பு இருக்காது,’’ என்றனர். கூட்டணியை உறுதி செய்யும் நோக்கத்துடன் வரும் அமித்ஷாவுக்கு ஷாக் கொடுக்கவே சந்திப்பதை புறக்கணித்துவிட்டு, எடப்பாடி பிரசார கூட்டங்களில் பங்கேற்க உள்ளது, டெல்லி பாஜ தலைமைக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: