ஆதார விலை திட்டத்தில் உளுந்து கொள்முதல் விவசாயிகளுக்கு அழைப்பு

திண்டுக்கல். ஜன. 24: மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டு ராபி பருவ காலத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்து விளைபொருளை ஜனவரி 20 முதல் ஏப்ரல் 30 வரையிலான காலத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொள்முதல் செய்திட தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உளுந்து 5,828 ஹெக்டேர் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பெரியபள்ளப்பட்டி, அலைபேசி எண்: 9940925095 மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், திண்டுக்கல் ரோடு, பழநி, அலைபேசி எண்: 8610885187 ஆகிய மையங்களில் உளுந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள உளுந்து நியாயமான சராசரி தரத்தின்படி ஒரு குவிண்டாலுக்கு இதர பொருட்கள் கலப்பு 0.10 சதவீதம், இதர தானியங்கள் கலப்பு 0.1 சதவீதம், சேதமடைந்த பருப்புகள் 0.5 சதவீதம், முதிர்வடையாத மற்றும் சுருங்கிய பருப்புகள் 0.5 சதவீதம், வண்டுகள் தாக்கிய பருப்புகள் 2 சதவீதம், ஈரப்பதம் 10 சதவீதம் என்ற அளவில் இருத்தல் வேண்டும்.

அரசால் உளுந்து விளைபொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.6000 (குவிண்டாலுக்கு) கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்படும் உளுந்துக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.  இத்திட்டத்தில் பயன் பெற விவசாயிகளின் அடங்கலில் மேற்படி சாகுபடி பரப்பு இடம் பெற்றிருக்க வேண்டும். மேற்படி, கொள்முதலுக்கு கொண்டு வரும் விவசாயிகள் நில உரிமைக்கான அசல் சிட்டா- அடங்கலும், ஆதார், வங்கி கணக்கு புத்தகத்தின் நகலும் கொள்முதல் மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: