புதுடெல்லி: ஒன்றிய அரசின் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், பிரதமர் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பான லோக்பாலில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையில் 6 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் 7 பேருக்கும் உயர்ரக பிஎம்பிள்யு 3 சீரிஸ் 330எல்ஐ ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வாங்க கடந்த அக்டோபர் 16ம் தேதி டெண்டர் விடப்பட்டது.
இந்த காரின் ஆன்ரோடு விலை ரூ.5 கோடி. இந்த டெண்டர் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் லோக்பால் அமைப்பை ஆடம்பர பிரியர்கள் என வர்ணித்தார்.
இந்நிலையில், கடும் சர்ச்சையை தொடர்ந்து 7 பிஎம்டபிள்யு கார்களை வாங்குவதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. லோக்பாலின் முழு அமர்வின் தீர்மானத்தை தொடர்ந்து, டெண்டரை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும், கடந்த டிசம்பர் 16ம் தேதி திருத்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
