இந்தியா-பாக். போரை நிறுத்தியது நாங்கள்தான்: டிரம்ப்பை தொடர்ந்து சீனாவும் அறிவிப்பு: இந்தியா திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி: இந்திய – பாகிஸ்தான் போரை தாங்கள் தலையிட்டு முடித்து வைத்ததாக சீனா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. கடந்த மே மாதம் 7ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நீடித்தது. பின்னர் மே 10ம் தேதி இரு நாட்டு ராணுவ நடவடிக்கை இயக்குநர்கள் (டிஜிஎம்ஓ) நடத்திய நேரடிப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘எனது எச்சரிக்கையால்தான் 24 மணி நேரத்தில் போர் நின்றது’ என்று தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் இஸ்ரேல் பிரதமரை சந்தித்த போதும், ‘இந்திய – பாக். போர் உட்பட 8 போர்களை நான்தான் முடித்து வைத்தேன்’ என்று பெருமையாகக் கூறியிருந்தார். தொடர்ந்து இதே கருத்தை 50க்கும் மேற்பட்ட முறை டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் ஒன்றிய அரசு, டிரம்பின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்ததுடன் இந்த போர் நிறுத்ததிற்கு மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்றும் கூறி வருகிறது.

இந்நிலையில் டிரம்ப் கருத்துக்கு போட்டியாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேசுகையில்;
‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதில் சீனா மத்தியஸ்தம் செய்தது. அரசியல் நிபந்தனைகள் இன்றி பிரச்னையின் ஆணிவேரை அறிந்து செயல்பட்டோம்’ என்று தெரிவித்தார். சீனாவின் இந்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவத் தரப்பில், ‘சீனா மத்தியஸ்தம் செய்யவில்லை, மாறாக இந்த மோதலை பயன்படுத்தி தங்கள் ஆயுதங்களை சோதித்ததுடன், பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்களை வழங்கியது’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி விளக்கமளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ”அமெரிக்க அதிபர் டிரம்ப் 7 நாடுகளில் 65 சந்தர்ப்பங்களில் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார். ஆனால் பிரதமர் மோடி இது குறித்து இன்னும் மவுனம் கலைத்ததில்லை. இப்போது சீன வெளியுறவுத் துறை அமைச்சரும் இதேபோன்ற கூற்றை முன்வைத்து சீனாவும் மத்தியஸ்தம் செய்ததாக கூறுகிறார். ஜூலை 4ம் தேதி ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா உண்மையில் சீனாவை எதிர்கொண்டு போரிட்டது என்று பகிரங்கமாக கூறியிருந்தார். இந்நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ததாக கூறும் கூற்றுக்கள் கவலைக்குரியவை. இது நாட்டின் தேசியப் பாதுகாப்பையே கேலிக்கூத்தாக்குவது போல் தெரிகிறது. ஆபரேஷன் சிந்தூர் திடீரென நிறுத்தப்பட்டதில் சீனா என்ன பங்கு வகித்தது என்பது குறித்து இந்திய மக்களுக்கு தெளிவு தேவை. பிரதமர் மோடி இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: