ஈரோடு: சத்தியமங்கலத்தில் நிதி நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக ஈரோடு கருங்கல்பாளையம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். 2013 முதல் சத்தியமங்கலத்தில் கார்த்தி என்பவர் டி.ஆர்.சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். நிதி நிறுவனத்தில் 350 பேர் மாதாந்திர சீட்டாக ரூ.5 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை தவணையாக செலுத்தி உள்ளனர்.
6 மாதமாக முதிர்வு தொகையை தராமல் காலம் தாழ்த்திய கார்த்தி 2 மாதங்களுக்கு முன் தலைமறைவாகி உள்ளார். ஏற்கனவே மாவட்ட எஸ்.பி. யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பணத்தை இழந்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 2 மாதமாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உறுதி அளித்த பின் கலைந்து சென்றனர்.
