பல்லடத்தில் இன்று 1.5 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் காரணம்பேட்டையில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு இன்று மாலை (29ம் தேதி) நடைபெறுகிறது. ‘‘வெல்லும் தமிழ் பெண்கள்” திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் இன்று 29ம் தேதி மாலை 4 மணிக்கு பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்று பேசுகிறார்.இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். துணை முதல்வரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை வழங்குகிறார். மாநாட்டுக்காக 90 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு 29 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 39 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பெண்கள் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

அவர்களுக்கு மாவட்டம் வாரியாக இடம் பிரிக்கப்பட்டு நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் வசதிக்காக 350 மொபைல் டாய்லெட், குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு 13 வகையான சிற்றுண்டிகள் மற்றும் இரவு உணவு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகனங்கள் நிறுத்துவதற்காக 50 ஏக்கர் பரப்பளவில் 10 இடங்களில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வந்து செல்லும் போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விரிவான போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு வசதிக்காக 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநாட்டு திடலை சுற்றிலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்தப்பட்ட விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண் திட்டம், பணிபுரியும் மகளிருக்கான மகப்பேறு விடுப்பு உயர்வு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு, தோழி விடுதிகள் உள்ளிட்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: