பாஜவோடு கூட்டணி சேர்ந்து தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள்? முடிந்தால் பட்டியலிடுங்கள் எடப்பாடிக்கு அமைச்சர் சவால்

திருவெறும்பூர்: பாஜவோடு கூட்டணி சேர்ந்து தமிழகத்துக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை பட்டியலிடுங்கள். நாங்களும், நாட்டு மக்களும் தெரிந்து கொள்கிறோம் என்று எடப்பாடிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தேர்தல் கொடுத்த வாக்குறுதி 5% மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கூறுகிறார். ஒரே நாளில் 22 கட்டிடங்களை திறந்து வைத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதற்கு கள்ளக்குறிச்சியில் தமிழக முதல்வர் ஓப்பன் சேலஞ்ச் செய்துள்ளனர். சட்டமன்றத்தில் நாங்கள் செய்யும் திட்டங்களை அடுக்கடுக்காக சொல்கிறோம், என்னென்ன வாக்குறுதி கொடுத்துள்ளோமோ, அதனை முழுமையாக நிறைவேற்றும் கடமை உள்ளது என முதல்வர் கூறும் போது, மக்களின் கோரிக்கை குறித்து சட்டசபையில் பேசும் போது, அங்கெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் பதில் சொல்லாமல் வெளிநடப்பு செய்கிறார். இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் பேச வேண்டும்.

அதை விட்டுவிட்டு நானும் சொல்கிறேன், நீயும் சொல்கிறேன் என போட்டி போட்டுக் கொண்டு சொல்லக்கூடாது. நீங்கள் என்ன செய்து உள்ளீர்கள் என்பதை நாங்களும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். அதை சட்டமன்றத்தில் கூறுங்கள். ஒன்றிய அரசோடு அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டுள்ளனர். இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய பல்வேறு நிதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.3,548 கோடி வரவில்லை. அதேபோல் ஜல்ஜீவன் திட்டத்தில் பழைய நிதியே ரூ.2,000 கோடி இதுவரை வரவில்லை. வாங்கி கொடுங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை பட்டியலிடுங்கள், நாங்களும், நாட்டு மக்களும் தெரிந்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: