* சென்னையில் பைக் சாகசங்களை தடுக்க 30 தனிப்படை அமைப்பு, போதைப் பொருள் பயன்படுத்தினால் கைது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னை உட்பட மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புத்தாண்டு அன்று நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ரிசார்ட்டுகளுக்கு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் வகையில் பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்புகளுடன் தயாராகி வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற கார் வெடி விபத்தை தொடர்ந்து எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அனைத்து மாநில உள்துறைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் புத்தாண்டு முதல் நாள் மற்றும் புத்தாண்டு அன்று பொதுமக்கள் கூடும் இடங்கள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதைதொடர்ந்து மாநிலம் முழுவதும் 2026ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு வழக்கத்தை விட ஒரு வாரத்திற்கு முன்பே மாநில பாதுகாப்பு தொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக டிஜிபி வெங்கடராமன்(பொறுப்பு), சென்னை போலீஸ் கமிஷனர் அருண், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் உளவுத்துறை ஐஜி செந்தில் வேலன் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநிலம் முழுவதும் கடலோர பகுதிகளில் சட்டம் ஒழுங்கு போலீசாருடன் இணைந்து கடலோர பாதுகாப்பு குழுமம் கடல் மார்க்கமாக சந்தேக நபர்கள் மாநிலத்திற்குள் ஊடுவதை தடுக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளுவது என முடிவு செய்யப்பட்டது.
புத்தாண்டு அன்று தமிழ்நாடு முழுவதும் காவல்துறை டிஜிபி வெங்கடராமன் உத்தரவுப்படி சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் மேற்பார்வையில் மாநகர கமிஷனர்கள், மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய ஆகிய 4 மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் 38 மாவட்ட கண்காணிப்பாகள் தலைமையில் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், மாநிலம் முழுவதும் நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், பார்களில் நள்ளிரவு இரவு 1 மணியுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய மாநகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இரவு ரோந்து பணிகள், வாகன சோதனைகள், மது குடித்து வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் பகுதியில் நிகழ்ச்சிகளை சீர்குலைக்கும் வகையில் யாரேனும் தொந்தரவு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுது போக்கு இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் மேற்பார்வையில், கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், பிரவேஷ்குமார், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 19 ஆயிரம் போலீசார் மற்றும் 1500 ஊர்க்காவல்படையிருடன் இணைந்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெறும் மெரினா கடற்கரை பகுதியில் இந்த ஆண்டு லட்சக்கணக்கான மக்கள் தங்களது குடும்பங்களுடன் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மெரினா பகுதிகளில் பொதுமக்கள் தடையின்றி வரும் வகையில் 31ம் தேதி இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 6 மணி வரை காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னம் முதல் கலங்கரை விளக்கம் வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணி போடப்படும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, உற்சாக மிகுதியில் நடைபெறும் வாகன சாகசங்களை தடுக்கும் வகையில் மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், அடையாறு, பரங்கிமலை, பூக்கடை என 12 காவல் மாவட்டங்களில் மொத்தம் 425 இடங்களில் சிறப்பு வாகன தணிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் மற்றும் தேவாலயங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைத்து தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பைக் ரேஸ்களை தடுக்கும் வகையில், கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஜிஸ்டி சாலை போன்ற 30 இடங்களில் சிறப்பு போலீஸ் பூத் அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொண்டாட்டம் என்ற பெயரில், பொதுமக்களை இடையூறு செய்யும் வகையில் பட்டாசுகள் வெடிக்க பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
அதேபோல் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து சென்னை காவல்துறைக்கு அனுமதி கடிதங்கள் வந்துள்ளது. ஆனால் போலீசார் தனியார் நிகழ்ச்சிகளுக்கு போதுகான இடம், வாகன பார்க்கிங் வசதிகள், சாலை வசதிகள் உள்ள இடங்கள் இருந்தால் மட்டும் கோரிக்கை மனுக்களை போலீசார் பரிசீலனை செய்கின்றனர். மற்ற இடங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனா. அதன்படி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம், நந்தனம் மைதாங்களில் தனியார் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு வாகன நிறுத்த வசதிகள் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசாட்டுகள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டா சென்னை காவல்துறையில் முன் அனுமதி கோரியுள்ளனர். அதன்படி காவல்துறை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று நீச்சல் குளத்திற்கு அருகே பந்தல்கள் அமைக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்கின்றனர்.
மேலும், ஓட்டல்கள், ரிசாட்டுகளிகளில் புத்தாண்டு அன்று நீச்சல் குளம் தற்காலிகமாக மூட வேண்டும், அனுமதி நேரத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். புத்தாண்டு நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா, மெத்தப்பெட்டைன், கொக்கைன் உள்ளிட்ட போதை வாஸ்துக்கள் பயன்படுத்தினால் நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் மற்றும் சம்பந்தபட்ட நபர்கள் கைது செய்யும், நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சீல் வைக்கவும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அப்படி காவல்துறை கட்டுப்பாடுகளை மீறினால் நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் தான் முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. மதுபான பார்கள், டாஸ்மாக் கடைகள் அனைத்து நேரக்கட்டுப்பாடுகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம் என்று நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் பொதுமக்களை எரிச்சலுட்டும் வகையில் அதிக ஒலி பெருக்கிகள், டிஜே நிகழ்ச்சிகளை காவல்துறை அனுமதி இல்லாமல் நடத்த கூடாது. மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் பொதுமக்கள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரை பகுதியில் மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினர் பணியில் ஈடுபட்ட தயாராக உள்ளனர்.
புத்தாண்டு அன்று கொண்டாட்டத்திற்கு மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு ஏற்றபடி வாகன நிறுத்துமிடம் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டு நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் 100 இடங்களில் திடீர் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு என்ற பெயரில் போலீசாரின் உத்தரவை மீறி யாரேனும் போக்குவரத்து இடையூறாக சாலைகளில், கடற்கரை பகுதியில் கூட்டமாக கூடினாலோ அல்லது கேக் வெட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடற்கரை பகுதிகளில் நிகழ்ச்சிகளின் போது கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்கவும், கண்காணிக்கவும், காவல்துறை சார்பில் பறந்து செயலி மூலம் ‘டிரோன் கேமராக்கள்’ பயன்படுத்தப்படுகிறது.
