புதுடெல்லி: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் நடந்த அதிரடி சோதனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தடுக்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால், தீவிரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தென்கிழக்கு டெல்லி காவல்துறையின் தலைமையில் ‘ஆபரேஷன் ஆகத் 3.0’ என்ற பெயரில் நேற்று இரவு முழுவதும் சிறப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நகரின் பதற்றமான பகுதிகள் மற்றும் குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் நடத்தப்பட்ட இந்த விடிய விடிய வேட்டையில், ரவுடிகள், தெருவோரக் குற்றவாளிகள் மற்றும் பழைய குற்றவாளிகள் குறிவைக்கப்பட்டனர். இந்த ஒரே இரவில் மட்டும் மொத்தம் 1,306 பேர் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 285 பேர் ஆயுதச் சட்டம், போதைப் பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சூதாட்டத் தடுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பண்டிகைக் காலத்தில் குற்றங்களைத் தடுக்கும் விதமாக 504 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், 116 பேர் பழைய குற்றவாளிகள் பட்டியலின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி சோதனையின் போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 நாட்டுத் துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் மற்றும் 27 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சுமார் 12,250 மதுபான பாட்டில்கள் மற்றும் 6 கிலோ கஞ்சாவும் சிக்கியது. இதுதவிர திருடப்பட்ட 310 செல்போன்கள், 231 இருசக்கர வாகனங்கள் மற்றும் சூதாட்ட கும்பலிடமிருந்து சுமார் 2.3 லட்சம் ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், ‘வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
