தொடர் விடுமுறை எதிரொலி சுற்றுலாப்பயணிகள் தேக்கடியை ‘முற்றுகை’

*படகு சவாரி செய்து உற்சாகம்

கூடலூர் : தேக்கடியில் படகு சவாரி செய்வதற்காக உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் குவிந்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் என தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு தங்கள் பயணத்தை தொடங்கி உள்ளனர்.

இதனால் தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களிலும் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தமிழக எல்லையை அடுத்துள்ள மாநிலமான கேரளாவின் பிரபல சுற்றுலாத்தலமான தேக்கடிக்கும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணியரின் வருகை உள்ளது.

அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்தபடி வன விலங்குகளையும், பறவைகளையும், இயற்கை அழகையும் கண்டுகளிப்பது சிறப்பான அனுபவமாக உள்ளது. இதற்காகவே உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் குடும்பத்தினருடன், இப்பகுதிக்கு வருகை தருகின்றனர். தற்போது தொடர் விடுமுறை காரணமாக, சுற்றுலாப்பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இங்கு படகு சவாரிக்கு ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது விதியாகும். ஆனால், சுற்றுலாப்பயணிகள் பலரும் முன்பதிவு செய்யும்போது, டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டதாக தகவல் கிடைக்கிறது.

இதையடுத்து தேக்கடி வரும் பலரும் படகு பயணத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றுச்செல்கின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு பின் படகு சவாரிக்கு அனுமதி இல்லை என்பதால், டிக்கெட் கவுன்டர் மூடப்படும். இதனால் அதன்பிறகு வரும் சுற்றுலாப்பயணிகள் பலரும் வாகனத்தின் மூலமாகவும், நடந்தும் குமுளி வரை வனச்சாலை வழியாக சென்று, இயற்கை அழகை கண்டுகளிக்கின்றனர்.

Related Stories: