வேலூர், திருவண்ணாமலை உட்பட 5 மாவட்டங்களுக்கு 1,338 டன் உரங்கள் ரயில் மூலம் காட்பாடிக்கு வந்தது

*லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு

வேலூர் : .தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக உரம், பூச்சி மருந்துகள், அடி உரம், தெளிப்பு மருந்துகள் போன்றவை வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலமாக அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், சென்னை, தூத்துக்குடி நகரங்களில் இருந்து யூரியா, டிஏபி உரங்கள் சரக்கு ரயில்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த உரங்கள் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள கூட்டுறவு உரக்கிடங்குகள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஆந்திர மாநில கங்காவரத்திலிருந்து காட்பாடி ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 1,338 டன் காம்பளக்ஸ் உரம் நேற்று காலை கொண்டு வரப்பட்டது. இந்த உரங்கள் லாரிகள் மூலம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: கங்காவரம் துறைமுகத்தில் இருந்து 1,338 டன் காம்பளக்ஸ் உரம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான அளவு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் யூரியா 2,060 டன், டிஏபி 890 டன், பொட்டாஷ் 395 டன், கலப்புரங்கள் 4,120 டன், சூப்பர் பாஸ்பேட் 280 டன், இயற்கை உரங்கள் 18.5 டன் மொத்தம் 7,760 டன் உரங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள 58 கூட்டுறவு மற்றும் 82 தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: