*வாகனங்கள் பல மணி நேரம் காத்திருப்பு
மூணாறு : கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், மூணாறு நகரின் சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது.தென்னகத்து காஷ்மீர் என்றழைக்கப்படும் கேரள மாநிலத்தில் உள்ள மூணாறின் குளிர் நிறைந்த பசுமையின் அழகை காண நாள்தோறும் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பது வழக்கம்.
இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை எதிரொலியாக மூணாறுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்துள்ளது. இதனால் மூணாறு நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இந்த வாகன நெரிசலில் சிக்கி சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, மூணாறு மாட்டுப்பெட்டி சாலை மற்றும் இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு செல்லும் சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், வாகனங்கள் பல மணிநேரம் காத்திருப்பதும் வாடிக்கையாக உள்ளது.
நெரிசலை தவிர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டுமென, வாகன ஓட்டிகள், வியாபாரிகள், சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வலுத்துள்ளது.
