100 நாள் வேலையை 3 நாள் கொடுக்கும் அதிமுக ஆட்சிக்கு இன்னும் மூன்று மாதத்தில் முடிவு: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பேச்சு

கூடுவாஞ்சேரி: அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் சபை கூட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சி ஆலப்பாக்கம் கிராமத்தில்   நடந்தது.  காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆராமுதன் தலைமை தாங்கினார். ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜே.ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சோ.ஆறுமுகம், எல்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வக்கீல் கருணாகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்பி செல்வம், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது, நெடுங்குன்றம் ஊராட்சியில் சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்பட அடிப்படை பிரச்னைகளுக்கு அதிமுக அரசு தீர்வு காணவில்லை. இலவச வீட்டுமனை பட்டா, விளையாட்டு மைதானம், சமுதாய கூடம் ஆகியவற்றை அமைத்து தர கோரியும் இதுவரை எதையும் செய்யவில்லை. 100 நாள் வேலையும் சரிவர வழங்குவதில்லை என சரமாரியாக குற்றஞ்சாட்டினார். அப்போது, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பேசுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்கீழ் 100 நாள் வழங்க வேண்டிய வேலையை, 3 நாள் கொடுக்கும் அதிமுக ஆட்சிக்கு இன்னும் 3 மாதத்தில் முடிவு கட்டி திமுக ஆட்சிக்கு வரும். அப்போது, மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார். தொழிலதிபர் ஆப்பூர் மதுசூதனன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏ.வி.எம்.இளங்கோவன் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், ஆலப்பாக்கம் பொறுப்பாளர் ராஜன் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Related Stories:

>