17 ஆண்டுகளுக்கு முன் வௌிநாடு சென்ற வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் நாடு திரும்பினார்: பொதுதேர்தலில் போட்டி?

டாக்கா: வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பின் நேற்று வங்கதேசம் திரும்பினார். வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஷேக் ஹசீனா பிரதமராக பதவி வகித்தபோது அரசுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது.

ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ முக்கிய காரணமாக இருந்த இளைஞர் அமைப்பின் தலைவர் ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடி அண்மையில் கொல்லப்பட்டார். இதேபோல், இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் என்பவர் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டார். இதனால் வங்கதேசத்தில் பதற்றமும், இந்தியா, வங்கதேச உறவில் பெரும் விரிசலும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி வங்கதேசத்தில் பொதுதேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு யூனுஸ் தலைமையிலான அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய பரபரப்பான சூழல்களுக்கிடையே வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் நேற்று வங்கதேசம் திரும்பினார். கலிதா ஜியா வங்கதேச பிரதமராக இரண்டுமுறை பதவி வகித்த காலத்தில் அவரது கட்சியின் செயல்தலைவராக இருந்த தாரிக் ரஹ்மான், ஆட்சியின் முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஷேக் ஹசீனா ஆட்சி அமைத்த பிறகு, தாரிக் ரஹ்மான் கடந்த 2008ம் ஆண்டு லண்டனுக்கு சென்று வசித்து வந்தார்.

இந்நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து டாக்காவின் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய தாரிக் ரஹ்மான், அவரது மனைவி ஜூபைதா ரஹ்மான், மகள் ஜைமா ரஹ்மான் ஆகியோரை வங்கதேச தேசியவாத கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். டாக்கா வந்திறங்கிய தாரிக் ரஹ்மான் இடைக்கால பிரதமர் முகமது யூனுஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பொதுதேர்தலில் அவாமி லீக் கட்சி போட்டியிட முடியாததால், வங்கதேச தேசியவாத கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. அத்துடன் தாரிக் ரஹ்மான் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என தகவல்கள் வௌியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* மாணவர் தலைவர் கொலைக்கு ஆட்சியில் இருப்பவர்களே காரணம்: ஹாடியின் சகோதரர் குற்றச்சாட்டு
வங்கதேசத்தில் நடைபெற உள்ள பொதுதேர்தலை சீர்குலைக்கவே மாணவர் தலைவர் ஹாடி கொலை செய்யப்பட்டதாக ஒஸ்மான் ஹாடியின் சகோதரர் குற்றம்சாட்டி உள்ளார். ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடியின் படுகொலையை கண்டித்து வங்கதேச தலைநகர் டாக்காவில் இன்கிலாப் மஞ்சா என்ற அமைப்பினர் நடத்திய பேரணியில், அவரது சகோதரர் உமர் ஹாடி கலந்து கொண்டு, இடைக்கால யூனுஸ் அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் பேசியதாவது, “என் சகோதரர் கொலைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே காரணம்.

ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடியை கொன்று விட்டு, அதை பிரச்னையாக பயன்படுத்தி பொதுதேர்தல் நடப்பதை சீர்குலைக்க முகமது யூனுஸ் அரசு சதி செய்கிறது. தேர்தல் சூழல் பாதிக்கப்படாமல், ஒஸ்மான் ஹாடியை கெலையில் தொடர்புடையவர்கள் யார் என்பதை அரசு உடனே தேசத்துக்கு வௌிப்படுத்த வேண்டும். அவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடி கொலைக்கு நீதி கிடைக்கவில்லையெனில், ஷேக் ஹசீனாவை போல நீங்களும் ஒருநாள் வங்கதேசத்தை விட்டு ஓட வேண்டிய நிலை கட்டாயம் ஏற்படும்” என ஆவேசமாக தெரிவித்தார்.

Related Stories: