பல லட்சம் கூடுதல் ஆவணங்கள் எப்ஸ்டீன் கோப்பு வெளியீடு தாமதம்: அமெரிக்க நீதித்துறை அறிவிப்பு

வாஷிங்டன்: சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு உயிரிழிந்த ஜெப் எப்ஸ்டீன் தொடர்பாக மேலும் பல லட்சம் ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் இவற்றை வெளியிட மேலும் சில வாரங்களாகும் என்றும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பாம் பீச்சை சேர்ந்த ஜெப் எப்ஸ்டீன் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்ததாக கடந்த 2019ல் குற்றம்சாட்டப்பட்டார். இது தொடர்பான விசாரணையின் போது அவர் சிறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலை என அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் எப்ஸ்டீனுடன் பல முக்கிய அரசியல் தலைவர்கள், விஐபிக்கள் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல புகைப்பட ஆதாரங்களை எப்பிஐ திரட்டி உள்ளது.

இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட அதிபர் டிரம்ப் நிர்வாகம் புதிய சட்டம் இயற்றியது. அதன்படி, கடந்த 19ம் தேதி எப்ஸ்டீன் கோப்புகள் பகிரங்கப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கெடு முடிந்த பிறகும் எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியிடப்படவில்லை. இது குறித்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட சமூக ஊடக பதிவில், எப்ஸ்டீன் தொடர்பான மேலும் பல லட்சம் கூடுதல் ஆவணங்கள் கிடைத்திருப்பதாக கூறி உள்ளது. மொத்தம் 36 லட்சம் ஆவணங்கள் ஆய்வு செய்யப்படுவதாகவும், அவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் யாருடைய தகவல்களும் கசிந்துவிடாமல் இருப்பதற்காக வழக்கறிஞர்கள் இரவு பகலாக பாடுபட்டு ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட மேலும் சில வாரங்கள் ஆகும் என நீதித்துறை கூறி உள்ளது.

Related Stories: