குலுக்கல் முறை ரத்தாகிறது எச்-1பி விசா வழங்குவதில் புதிய நடைமுறை அறிவிப்பு: அதிக திறமை, சம்பளதாரர்களுக்கு முன்னுரிமை

வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கி பணியாற்ற வெளிநாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 85,000 வெளிநாட்டவர்களுக்கு இந்த விசா வழங்கப்படும். இந்த விசாவால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாக குற்றம் சாட்டிய அதிபராக டிரம்ப் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்தார். புதிதாக எச்-1பி விசா பெறுவதற்கான கட்டணத்தை ரூ.89 லட்சமாக அதிகரித்தார். விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என்றார். அந்த வரிசையில் தற்போது எச்-1பி விசா வழங்கும் நடைமுறையும் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை இந்த விசா குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு அதிக திறமை வாய்ந்த, அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ டிராகெசர் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு பிப்ரவரி 27 முதல் அமலுக்கு வருகிறது. குலுக்கல் முறையில் விசா வழங்கப்படுவதால் குறைவான சம்பளம் பெறுபவர்கள் பணியமர்த்தப்பட்டு அமெரிக்கர்களுக்கு வாய்ப்பு பறிபோவதாகவும், இனி அதிகமான சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே எச்-1பி விசா வழங்கப்படுவதால் முறைகேடுகளை தடுக்க முடியும் என்றும் மேத்யூ டிராகெசர் கூறி உள்ளார். இந்த ஆண்டு, அதிகபட்சமாக அமேசான் நிறுவனம் 10,000-க்கும் மேற்பட்ட எச்-1பி விசாக்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து டிசிஎஸ், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்கள் பெற்றுள்ளன.

Related Stories: