போடி பாலார்பட்டியில் கழிவுநீர் வாறுகால் பணி தீவிரம் பொதுமக்கள் மகிழ்ச்சி

போடி, 21: போடி அருகே உப்புகோட்டை ஊராட்சிக்குட்பட்டது குண்டல்நாயக்கன்பட்டி, பாலார்பட்டி, மாணிக்காபுரம் கிராமங்கள். இப்பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவ்வூர்கள் அனைத்தும் போடேந்திரபுரம்- உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலை, போடி- தேனி மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. பாலார்பட்டியில் சாலையின் இருபுறமும் குடியிருப்புகள், கடைகள் என வரிசையாக உள்ளன. இங்கு அடிப்படை வசதியான வாறுகால் வசதி இல்லாததால் வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மெயின்ரோட்டிலே கடப்பதால் எந்நேரமும் சேறும், சகதியாக காணப்படுவதுடன் கடும் துர்நாற்றம் வீசி வந்தது.

தவிர கொசுக்களும் அதிகளவு உற்பத்தியாகி மக்களின் தூக்கத்தை கெடுத்து வந்ததுடன், தொற்று நோய்களையும் பரப்பி வந்தது. மேலும் ரோடும் குண்டும், குழியுமாக மண் சாலையாக காட்சியளித்ததால் வாகனஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து உப்புக்கோட்டை ஊராட்சி, போடி ஒன்றிய அலுவலகங்களில் பலமுறை புகார்கள் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலார்பட்டி சாலையின் இருபுறங்களிலும் கழிவுநீர் வாறுகால் அமைப்பதுடன், வீடுகள், கடைகளுக்குள் பொதுமக்கள் சென்று வர வாறுகால் மேல் சிமெண்ட் பாலங்களும் போடப்பட்டு வருகின்றன. மேலும் சாலை விரிவாக்க பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இப்பணிகள் நடக்க தூண்டுகோளாய் இருந்த தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>