திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் பழம்பெரும் டைரக்டர்களில் ஒருவர் குஞ்சு முகம்மது. சமீபத்தில் முடிவடைந்த கேரள சர்வதேச திரைப்பட விழா சினிமா தேர்வுக் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் திரைப்பட விழாவுக்கு சினிமாக்களை தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் குஞ்சு முகம்மது, கமிட்டி உறுப்பினர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். அப்போது பெண் சினிமா கலைஞர் தங்கியிருந்த அறைக்கு சென்ற டைரக்டர் குஞ்சு முகம்மது, அவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து குஞ்சு முகம்மது திருவனந்தபுரம் போலீசில் விசாரணைக்கு ஆஜரானார். அவரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
