டெல்லி : டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்கள் தவித்து வரும் நிலையில், காற்று சுத்திகரிப்புக் கருவிகள் மீதான GST-யை நீக்க ஒன்றிய அரசு தவறியுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. காற்று சுத்திகரிப்பு கருவிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு கோரியும் காற்று சுத்திகரிப்பு கருவிகளை மருத்துவ சாதனங்கள் என அறிவிக்கக் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, காற்று சுத்திகரிப்பான்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை.
டெல்லி நகரில் காற்று சுத்திகரிப்பான்களை ஆடம்பரப் பொருட்களாகக் கருத முடியாது. சுத்தமான காற்று அவசியம், ஒன்றிய அரசால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்பது வேதனை. நச்சுக் காற்றில் இருந்து அடிப்படைப் பாதுகாப்புகூட இல்லாமல் குடிமக்கள் தவிக்கவிடப்பட்டுள்ளனர். பள்ளிகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் தற்காலிக ஏற்பாடுகள் மட்டுமே, இவை நிரந்தரத் தீர்வுகள் அல்ல. காற்று மாசுவை தடுக்க நீண்ட காலத் தீர்வுகள் குறித்து ஒன்றிய அரசு விரிவான திட்டங்களை உருவாக்க வேண்டும். விரைவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்தி சுத்திகரிப்புக் கருவிகள் மீதான GST-யை நீக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடுகிறோம், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
