கடையம், டிச.25: கடையம் அருகே மேட்டூர் சி.எஸ்.ஐ பரி. திரித்துவ ஆலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் முந்தைய நாள் பாயாச பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தினர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபட ஊர் மக்கள் ஒன்று கூடி நேர்ச்சையாக கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று பாயாசப் பொருட்களை சேகரித்து வந்து, ஆண்கள் எல்லாரும் சிறியவர் முதல் பெரியவர் வரை தோளில் தண்ணீர் சுமந்து வந்து அங்குள்ள ஆலய வளாகத்தில் வைத்து பாயாசம் தயார் செய்து அனைவருக்கும் வழங்கி உள்ளனர். அதன் பின்னரே அந்த நோயின் தாக்கம் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் பாயாச பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இதனை நினைவு கூறும் வகையில் கிறிஸ்துமஸ்க்கு முந்தைய நாளில் ஆண்கள் அனைவரும் பொதுமக்களிடம் சேகரித்த பொருட்களைக் கொண்டு பாயாசம் தயார் செய்து அனைவருக்கும் வழங்கினர். இந்த திருவிழாவில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டனர்.
