போலீஸ் தடையை மீறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன. 21: கோவையில் போலீஸ் தடையை மீறி தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது. கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாநகர் 64வது வார்டு சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் சுமார் 17.55 ஏக்கர் பரப்பளவில் தமிழக வீட்டுவசதி வாரியம் சார்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு  960 அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இதில், 300 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. இவற்றை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. பல போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை.  எனவே, இப்பகுதி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மழையினால் வீடுகள் இடிந்து பெரும் விபத்து ஏற்படும் முன்,  சேதமடைந்துள்ள இந்த வீடுகளை இடித்துவிட்டு  காலதாமதம் இல்லாமல், அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும். அதுவரை அப்பகுதி மக்களுக்கு அங்கேயே தற்காலிக குடியிருப்பு கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே ேநற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும், தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து, கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பி. நாச்சிமுத்து, குமரேசன், வெ.நா.உதயகுமார், மு.இரா.செல்வராஜ், வக்கீல்கள் பி.ஆர்.அருள்மொழி, ஜி.டி.ராஜேந்திரன், ரவிச்சந்திரன், விஜயராகவன், இளைஞர் அணி கோட்டை அப்பாஸ், மு.மா.ச.முருகன், முருகவேல், ஆ.கண்ணன், ஆனந்தன், உமாமகேஸ்வரி, சிங்கை பிரபாகரன், குப்பனூர் பழனிச்சாமி, கமல் மனோகர், சக்தி, சீனிவாசன், கே.ஆர்.ராஜா, வெங்கடேஸ்வரன், மனோகரன், தேவசீலன், கல்பனா செந்தில், கனிமொழி, சித்ரகலா, ராஜ ராஜேஸ்வரி, தீபா, சிங்கை சிவா,  ஷேக் அப்துல்லா, சேதுராமன், பசுபதி, மார்க்கெட் எம். மனோகரன், பதுருதீன், நாகராஜ், சேரலாதன், ஹட்கோ அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் ஹட்கோ ஜெயராமன், தமிழ்மணி, கண்ணாதுரை உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றி கார்த்திக் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘‘ஜனநாயக முறையில் அமைதியாக நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பது கண்டனத்துக்குரியது. அனுமதி மறுத்தாலும், தடையை மீறி தொடர் போராட்டம் நடைபெறும். சென்னை மவுலிவாக்கம், மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் நடந்த விபத்துகள் போல  இந்த பகுதியிலும் நடைபெறாமல் இருக்க, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பகுதியில் புதிய வீடுகள் கட்டுமான பணிக்கு அரசாணை பிறப்பித்து, ஒரு சிறப்பு தனி அலுவலர் நியமிக்க வேண்டும். அரசு, காலம் தாழ்த்தும் பட்சத்தில், தி.மு.க. போராட்டம் தொடரும். இனியும் அலட்சியம் செய்தால் கோவைக்கு முதல்வர் வரும்போது அவருக்கு கருப்புக்கொடி காட்டக்கூட தயங்க மாட்டோம்’’ என்றார்.

Related Stories:

>