10 மாதங்களுக்கு பிறகு திறப்பு மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்

சாயல்குடி, ஜன.20: கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு, அதில் மாணவர்கள் படித்து வந்தனர். இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி 10 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, மண்டபம், ராமநாதபுரம் ஆகிய கல்வி மாவட்டங்கள் உள்ளன. கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, போகலூர், நயினார்கோயில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, மண்டபம், ராமநாதபுரம், திருப்புல்லாணி ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் 66 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 13 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், 27 தனியார் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 70 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 36 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், 56 தனியார் மேல்நிலைப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது.

பள்ளிகளின் நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப அளவு பரிசோதனை செய்தனர். முகக்கவசம், கை கழுவ சோப்பு மற்றும் திரவம் பயன்படுத்துதல் அவசியம், சமூக இடைவெளி, கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணவர்வு ஏற்படுத்தும் விதமாக விளக்கப்பட்டது. 10 மாதங்கள் கழித்து வகுப்பு நண்பர்களை பார்த்தது, வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்தல் போன்றவை மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: