பெங்களூரு: பெங்களூருவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நள்ளிரவு வரை செயல்பட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான சொகுசு உணவகம் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவின் முக்கியப் பகுதியான செயின்ட் மார்க்ஸ் சாலையில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ‘பாஸ்டியன்’ என்ற சொகுசு உணவகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 11ம் தேதி இரவு இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த மோதலில் தொழிலதிபரும், டிவி நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான சத்யா நாயுடு என்பவர் ஈடுபட்டது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கப்பன் பார்க் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ‘அரசு அனுமதித்த நேரத்தைக் கடந்தும் அதிகாலை 1.30 மணி வரை அந்த உணவகம் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது’. இதையடுத்து விதிகளை மீறியதாக கர்நாடக காவல் சட்டப்பிரிவு 103-ன் கீழ் உணவக மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வருவதால் இரவு நேர விதிமீறல்களைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ரெசிடென்சி சாலையில் உள்ள மற்றொரு விடுதி மீதும் இதேபோன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
