திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் பழம்பெரும் இயக்குனர்களில் ஒருவர் பி.டி. குஞ்சு முகம்மது (76). இவர் இரண்டு முறை சிபிஎம் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் கேரள சர்வதேச திரைப்பட விழா சினிமா தேர்வுக் கமிட்டி தலைவராக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து திரைப்பட விழாவுக்கான சினிமா தேர்வு தொடர்பாக ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஒரு பெண் சினிமா கலைஞரிடம் குஞ்சு முகம்மது ஓட்டல் அறையில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் சினிமா கலைஞர் கேரள முதல்வர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து குஞ்சு முகம்மது மீது திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இவர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவுக்கு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த போலீசார், டைரக்டர் குஞ்சு முகம்மதுக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர். இதற்கிடையே நேற்று திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் சினிமா கலைஞர் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
