உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4 கோடி வாக்காளர்களின் பெயர் பட்டியலில் மாயம்: எஸ்ஐஆர் குறித்து யோகி ஆதித்யநாத் பீதி

 

லக்னோ: வாக்காளர் பட்டியலில் நான்கு கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் பாஜக ஆதரவாளர்கள் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 2027ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளைத் (எஸ்ஐஆர்) தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில் 15 கோடியே 44 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் சிறப்புத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை 12 கோடியாகக் குறைந்துள்ளது.

புதிதாக 18 வயது நிரம்பியவர்களைச் சேர்க்கும்போது வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமே தவிர, இவ்வாறு பெருமளவில் குறைவது இயல்புக்கு மாறானதாகும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், லக்னோவில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘மாநிலத்தில் சுமார் 4 கோடி வாக்காளர்களின் பெயர்கள் மாயமாகியுள்ளன; விடுபட்டுள்ள இவர்களில் 85 முதல் 90 சதவீதம் பேர் பாஜக ஆதரவு வாக்காளர்கள் ஆவர்.

நகர்ப்புறங்களில் தான் அதிகமான வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளன; சில மாவட்டங்களில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்து, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்; அதேசமயம் தகுதியுள்ள புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதில் தொண்டர்கள் கவனம் செலுத்த வேண்டும்’ என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை பாஜக ஆதரித்து வரும் நிலையில், உத்தரபிரதேச பாஜக முதல்வர் 4 கோடி வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Stories: