“நற்காய் உதிர்தலும் உண்டு”

தொழுகை, நோன்பு போன்ற நல்லறங்களில் ஈடுபடுவதைச் சிலர் தட்டிக் கழிப்பார்கள். கேட்டால், “என்ன அவசரம்? அறுபது வயதுக்கு மேல் பார்த்துக் கொள்ளலாம்” என்பார்கள்.நல்ல வசதி வாய்ப்பும் செல்வ வளமும் உள்ள இளைஞனிடம், “தம்பி வசதியாக இருக்கும் நேரத்திலேயே ஹஜ்-புனிதப் பயணக் கடமையை நிறைவேற்றலாமே?”என்று சொன்னால்,‘அதெல்லாம் ஐம்பது, அறுபது வயதுக்குப் பிறகுதான், இப்போ எதுக்கு?” என்று அலட்சியமாய் ஒரு பதில்.தான தர்மங்கள், பிறர்க்கு உதவுதல், உறவுகளைப் பேணுதல், அநாதைகளுக்கு ஆதரவு அளித்தல் எனப் பல அறச் செயல்கள் செய்ய அடுக்கடுக்காய் வாய்ப்பு இருந்தும் சிலர் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
புண்ணியங்களை ஈட்டிக்கொள்ள எண்ணற்ற வாய்ப்புகள் கிடைத்தும், அக்கறை இல்லாமல் தட்டிக் கழிப்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம்- “பிறகு பார்க்கலாம்… ஒன்றும் அவசரம் இல்லை” இப்படிப்பட்டவர்களுக்குத்தான் நபிகளார்(ஸல்) ரத்தினச் சுருக்கமாக ஓர் அறிவுரையைக் கூறினார்கள்-

“ஒட்டகம் இருக்கும்போதே ஒப்பில்லா ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்”அதாவது வாய்ப்புகள் இருக்கும்போதே நல்லறங்களில் ஈடுபடுங்கள்… “நாளை…நாளை” எனத் தள்ளிப் போட்டால் நாளை என்ன நடக்குமென்று யார் அறிவார்?‘நாலடியார்’ நூலில் ஓர் அருமையான பாடல் இதே கருத்தை வலியுறுத்துகிறது.“மற்றறிவாம் நல்வினை யாம்இளையாம் என்னாதுகைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின் முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்நற்காய் உதிர்தலும் உண்டு” (நாலடியார், பாடல்- 19)நபிகளாரின் கருத்தை அப்படியே செய்யுள் வடிவில் தந்தது போல் உள்ளது.நாலடியார் பாடலின் பொருள் என்ன?

“நல்லறங்களைப் பின்னர் ஆராய்ந்து செய்வோம்…இப்போது இளைஞராக இருக்கிறோம் என்று நினையாமல் பொருள் இருக்கும்போதே அறம் செய்யுங்கள்.“கடும் காற்றால் பழங்கள் உதிராமல் இருக்க, காய் உதிர்வது போல வயதானவர் பிழைத்திருக்க வாலிபர்கள் இறத்தலும் உண்டு.”மீண்டும் அந்த இறுதிவரிகளை இதயத்தில் நிறுத்துவோம்.“முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால் நற்காய் உதிர்தலும் உண்டு.”“இறப்பு என்பது முதுமையில்தான், இளமையில் இல்லை” எனும் தவறான கருத்தில் இருந்துவிடாமல் இளமைக் காலத்திலேயே இறைவழியில் நின்று இயன்றவரை புண்ணியங்களைத் தேடிக் கொள்வோம்.வருமுன்னர்க் காப்பதுதானே அறிவுடைமை.வாய்ப்புகள் இருக்கும்போதே நல்லறங்களில் ஈடுபடுவதுதான் அருளுடைமை.
– சிராஜுல் ஹஸன்

இந்த வார சிந்தனை

“ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்துவிட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும் கால அவகாசத்தை இறைவன் கண்டிப்பாக அளிப்பதில்லை. நீங்கள் என்னென்ன செய்து கொண்டிருந்தீர்களோ அவற்றை இறைவன் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.”
(குர்ஆன் 63:11)

 

Related Stories: