கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தவெக மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நகர பொறுப்பாளர் பொன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை சிபிஐயிடம் அளித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சென்னையில் விரைவில் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் பசுபதிபாளையம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நந்தகுமார், குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன், போக்குவரத்து காவலர் ராஜ்குமார், கரூர் நகர காவலர் முத்துக்குமார் ஆகிய 4 பேரிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்தது.
