சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்; இம்ரான் கானை சந்திக்க மகன்களுக்கு தடை: சினிமா தயாரிப்பாளரான மாஜி மனைவி உருக்கம்

 

லண்டன்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அவரது மகன்கள் தொடர்பு கொள்ள முடியாமல் தவிப்பதாக அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கவலையுடன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 22 மாதங்களாக ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், இந்தத் தனிமைச் சிறைவாசம் சித்திரவதை போன்றது என்றும் ஐநா மனித உரிமை நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். இந்நிலையில், இம்ரான் கானின் முன்னாள் மனைவியும், இங்கிலாந்து திரைப்படத் தயாரிப்பாளருமான ஜெமிமா கோல்ட்ஸ்மித், தனது மகன்கள் சுலைமான் மற்றும் காசிம் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்கள் தந்தையைப் பார்க்கவோ அல்லது பேசவோ முடியாமல் தடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது அரசியல் அல்ல, தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள ஜெமிமா, ‘எனது மகன்கள் பாகிஸ்தான் சென்று தந்தையைச் சந்திக்க முயன்றால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் மிரட்டுகின்றனர்; தொலைபேசியில் பேசவோ அல்லது கடிதம் எழுதவோ கூட அனுமதி மறுக்கப்படுகிறது’ என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்துச் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் தான் வெளியிடும் பதிவுகள் மக்களிடம் சென்றடையாதவாறு முடக்கப்படுவதாகக் கூறியுள்ள அவர், இது தொடர்பாகத் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்கிடமும் முறையிட்டுள்ளார். சிறையில் வாடும் இம்ரான் கானுக்குத் தனிப்பட்ட மருத்துவரைச் சந்திக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகன்களின் பாதுகாப்பு குறித்தும் ஜெமிமா அச்சம் வெளியிட்டுள்ளார்.

 

Related Stories: