கொல்லப்பட்ட கமேனியின் ஆட்சி காலத்தில் ஈரான் ஒடுக்குமுறை குறித்து நடிகை குமுறல்: துபாயில் சிக்கிய இந்திய நடிகைகள் அலறல்

ஈரான் முன்னாள் தலைவர் அலி கமேனி ஆட்சியில் மக்கள் அனுபவித்த இன்னல்கள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேநேரம் துபாயில் தங்கியுள்ள இந்திய திரையுலகினர் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்து வரும் போர் காரணமாக ஐக்கிய அரபு அமீரக வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதை அடுத்து துபாயில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் நாட்டின் உச்ச தலைவராக இருந்த மறைந்த கமேனியின் ஆட்சி காலத்தில், அந்நாட்டு மக்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். குறிப்பாக பெண்கள் ஆடை அணிவது மற்றும் பொது இடங்களில் நடப்பதில் கடுமையான சட்டங்கள் அமலில் இருந்தன.

இந்நிலையில், அவரது மறைவை ஒரு தரப்பினர் கொண்டாடியும் மற்றொரு தரப்பினர் துக்கமாகவும் அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரானிய-அமெரிக்க நடிகையான சதாப் தாஹேரியன் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அதில் கமேனி ஆட்சியில் நிலவிய மூச்சுத்திணற வைக்கும் சூழலை அவர் விவரித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ஈரானில் இருந்தபோது ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்க முடியாது. எப்போதும் ஒருவித கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பது போன்ற அச்ச உணர்வே மேலோங்கி இருக்கும். பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதிமுறை பெரும் மன அழுத்தத்தை கொடுத்தது. பொது இடங்களில் இசை, நடனம் என எதற்கும் அனுமதி இல்லை. மக்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாகவே வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது. ஈரானின் பொருளாதார நெருக்கடி, நிதிச் சுமை மற்றும் மக்களின் வறுமையை பார்க்க முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பாலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நிச்சயமற்ற சூழலால் கடும் மன உளைச்சலும் தூக்கமின்மையும் ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்ற பயத்தால், எனது மூளை எப்போதும் விழிப்புடனேயே இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் துபாயில் இருக்கும் கன்னட நடிகை தீபிகா தாஸ், வெளியிட்ட பதிவில், ‘தற்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பழைய வீடியோக்களையும் தவறான தகவல்களையும் பகிர்ந்து தேவையற்ற பீதியை உருவாக்க வேண்டாம்’ என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் இருக்கும் நடிகை நோரா பதேகி வெளியிட்ட பதிவில், ‘தற்போது நான் இந்தியாவில் பாதுகாப்பாகவே இருக்கிறேன். நான் வளைகுடா நாடுகளில் சிக்கி இருப்பதாக பரப்பப்படும் வதந்திகளை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம். இந்த இக்கட்டான சூழலில் உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகைகள் சோனல் சவுகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் துபாயில் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் இந்த சூழலால் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள வேளையில், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

Related Stories: