ஈரோடு, டிச.12: ஈரோடு மாவட்டத்தில் நடந்து முடிந்த அரசு வளர்ச்சி திட்டப்பணிகளை சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இக்குழுவுக்கு வேடச்சந்தூர் திமுக எம்.எல்.ஏ. காந்திராஜன் தலைவராக பொறுப்பு வகித்தார். திருவாடனை காங்கிரஸ் எம்.எல்.ஏ. கருமாணிக்கம், தர்மபுரி பா.ம.க. எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், முதன்மை செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் குழுவில் பங்கேற்றிருந்தனர்.
முதலாவதாக இக்குழுவினர், ஈரோடு, சோலாரில், ரூ. 74.944 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அப்போது, அங்குள்ள கடைகள், பயணிகள் கழிப்பறை, காத்திருப்பு அறை, பேருந்து, ஓட்டுனர், நடத்துனர் ஓய்வறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பயணிகள், பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களிடம், போக்குவரத்து வசதிகள் மற்றும் அவர்களது தேவை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர். இப்புதிய பேருந்து நிலையத்துக்கு கரூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, வெள்ளகோவில் மார்க்கத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் மட்டுமே வந்து செல்கின்றன.
தனியார் பேருந்துகள் வருவதில்லை என்பதை அறிந்த குழுவின் தலைவர், அப்பிரச்னைக்குத் தீர்வு காண அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தவும் அவர் கேட்டுக் கொண்டார். பின்னர், அங்கு தூய்மைப் பணியாளர்கள் முழுமையாக ஈடுபடுத்தப்படுகின்றனரா? என்பது குறிது ஆய்வு செய்தனர்.
அப்போது, அவர்களிடம், பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உணவு, ஓய்விடம், இருக்கை, தண்ணீர் வசதி, கழிப்பறை போன்றவற்றையும் விரைவில் ஏற்படுத்தி தர அரசிடம் தெரிவிப்போம் என்றனர். அதனதை தொடர்ந்து, இதை தொடர்ந்து அவல்பூந்துறையில், தாராபுரம் சாலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ. 2.15 கோடி மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகள், சென்னிமலை முருகன் கோயில் மலைப்பாதை ரூ. 6.70 கோடி மதிப்பீட்டில் சீரமைத்துள்ள பணிகள், பெருந்துறையில், தேங்காய், கொப்பரை தேங்காய் ஏல மையம் ஆகியவற்றையும் இக்குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, கலெக்டர் கந்தசாமி, மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், துணை ஆணையர் தனலட்சுமி மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.
