சிவன் கோயிலில் சிலை திருட்டு

பாலக்கோடு, டிச.12: பாலக்கோடு அருகே சிவன் கோயிலில், பூசாரி ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது, மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்து அம்மன் சிலையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது, இக்கோயில் கர்ப்ப கிரகத்தில் சிவலிங்கத்துடன் கூடிய வாழைத்தாய் அம்மன் சிலை இருந்தது. இக்கோயிலின் பூசாரியாக கணேசன்(52) என்பவர் இருந்து வருகிறார். சந்நியாசியான இவர், நேற்று முன்தினம் காலை பூஜை முடிந்ததும் வழக்கம்போல் தியானத்தில் அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் கண் விழித்து பார்த்த போது சிவலிங்கம் அருகில் இருந்த வாழைத்தாய் அம்மன் சிலை காணாததை கண்டு திடுக்கிட்டார். ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது, மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்து அம்மன் சிலையை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். அதில், ஒரு அடி உயரமுள்ள பஞ்சலோக சிலையின் மதிப்பு சுமார் ரூ.40 ஆயிரம் இருக்கும் என தெரிவித்துள்ளார். இதன்பேரிலி, போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: