பாத்திரக்கடை உரிமையாளர் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(42). பாத்திரக்கடை உரிமையாளர். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெய்சங்கர் நாட்றம்பள்ளியில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது சோமநாயக்கன்பட்டி அருகே எதிரே வந்த மற்றொரு பைக்கும், இவரது பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெய்சங்கர் தலையில் படுகாயம் ஏற்பட்டது. மற்றொரு பைக்கில் வந்த ஜங்களாபுரத்தை சேர்ந்த ராஜ்குமார்(38) என்பவரும் படுகாயம் அடைந்தார். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் ஜெய்சங்கர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெய்சங்கரின் உடல் உறுப்புகளை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் நேற்று தானமாக வழங்கினர். அவரது உடலுக்கு டாக்டர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்குமார், தீவிர சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: